ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே புதர்மண்டி கிடக்கும் உபரிநீர் கால்வாயினை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான ஆந்திராவில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கால்வாய் மூலம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், செல்லாத்தூர் கிராமம் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு நீர் வந்து கொண்டிருந்தது. அதன்படி ஆந்திர மாநிலம், வெங்கட்ராஜகுப்பம் பெரிய ஏரியிலிருந்து நாராயணபுரம், அம்மையார்குப்பம், ராகவநாயுடு குப்பம், ராஜா நகரம், புதூர், வேலன் கண்டிகை வழியாக செல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஏரி வரை இந்த உபரிநீரானது செல்கின்றது.
இந்த, உபரிநீரை பயன்படுத்தி 10 கிராமங்களை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வந்தன. இந்நிலையில், 20 அடி அகலம் கொண்ட இந்த கால்வாயின் ராஜா நகரம் கிராமம் மேம்பாலம் அருகில் கருவேல மரங்கள், செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால், கால்வாய் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது. இக்கருவேல மரங்களால் அதிகளவில் நீர் உறிஞ்சப்படுவதால், நீர்வரத்து அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை அதிகளவில் கொட்டி செல்கின்றனர். அந்த கழிவுகளை கால்வாயில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை ஒன்றிய கவுன்சிலர் கல்விக்கரசி சேகர், கவுன்சிலர் கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து புகார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ராஜா நகரம் பகுதியில் காடுபோல் வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்கள், முள் புதர்களை அகற்றி சீர்படுத்த வேண்டும். ஆர்.கே.பேட்டை பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தி, இனிவரும் காலங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டாத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆர்.கே.பேட்டை அருகே புதர் மண்டி கிடக்கும் உபரிநீர் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.