கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதில், பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகையில் சிபிஐ, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய் மட்டுமே மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் அவரே கொலை செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்துள்ள சிபிஐ, இன்று பிற்பகல் சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது.
குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராயை முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.
மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்தீப் கோஷ்,வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சந்தீப் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
The post கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!! appeared first on Dinakaran.