கடலூர், அக். 7: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் நேற்று குவிந்தனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் ஏராளமான பொதுமக்கள் அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவை உட்கொள்வர். மேலும் சனிக்கிழமைகளில் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமைகளில் தளியல் போட்டு பெருமாளை வழிபடுவர்.
மூன்றாவது சனிக்கிழமை முடிந்ததும் அசைவ பிரியர்கள் சிலர் விரதத்தை முடித்துவிட்டு, அசைவத்தை வாங்கி உண்பர். அதன்படி நேற்றுமுன்தினம் மூன்றாவது சனிக்கிழமை முடிந்ததை தொடர்ந்து நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நேற்றுமுன்தினம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 3 மணி முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். இதனால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு தரப்பினரும் வந்து மீன்களை வாங்கி சென்றனர்.
வஞ்சிரம் கிலோ 800 ரூபாய்க்கும். சங்கரா மீன் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 400 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், இறால் கிலோ 270 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
The post கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் appeared first on Dinakaran.