- ஆயுத பூஜை சிறப்பு சந்தை
- கோயம்பேடு உணவு தானிய சந்தை
- அண்ணாநகர்
- அயுத பூஜை
- கோயம்பேடு
- விநாயகர் சதுர்த்தி
- பொங்கல்
- ஆயுதபூஜை சிறப்பு சந்தை
அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் இன்று முதல் 7 நாட்கள் சிறப்பு சந்தை நடைபெறும், என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். காய்கறி, பூ, பழங்கள் ஒரே இடத்தில் குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த சிறப்பு சந்தை நடைபெறும்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சிறப்பு சந்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளின் நலன் கருதி கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு, சிறப்பு சந்தை அமைப்பதற்காக ஆலோசனை கூட்டம், அங்காடி நிர்வாக அலுவலம் இந்துமதி தலைமையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்தது. அதில், வியாபாரிகள், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சிறப்பு சந்தை அமைப்பதற்கு போதுமான ஏற்பாடுகளை போலீசார் செய்து தர வேண்டும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு மார்க்கெட் வழியாக செல்லாமல் மாற்று பாதையில் இயக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்ப்பட்டது. மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, சட்டம் ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆயுத பூஜை சிறப்பு சந்தை இன்று தொடங்கி, வரும் 13ம் தேதி வரை நடைபெறும், என அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சிறப்பு சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, உணவு தானிய மார்க்கெட்டில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழை இலை, தேங்காய் போன்ற பூஜை பொருட்களை வியாபாரம் செய்து கொள்ளலாம். அதேபோல் கரும்பு, பூசணிக்காய் போன்ற பொருட்களை வியாபாரம் செய்வதற்கு வேறு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தோரணங்கள், அலங்காரங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு வேறு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையில், வியாபாரிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் முறையிடலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சிறப்பு சந்தைக்காக, நேற்று முன்தினம் இரவு பொறி, வேர்க்கடலை, தேங்காய் போன்ற அனைத்து பொருட்களும் வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி, பூ, பழங்கள் ஆகிய பொருட்களை வாங்குவதற்கு திராளான கூட்டம் அலைமோதும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்பதால் சட்டம் ஒழுங்கு போலீசார் உயர கோபுரம் அமைத்து, கண்காணிப்பதுடன், ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்,’’ என்றார்.
The post கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை: இன்று தொடங்கி 7 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.