பெரம்பூர்: மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி நடைபெற்றது. கடுமையான மழை வெள்ள பாதிப்புகள் காலத்திலும், கொரோனா போன்ற நோய் தொற்றுகள் காலத்திலும் நமக்கு தங்கு தடையின்றி அனைத்து வசதிகளும் கிடைக்க உறுதுணையாக இருந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்கள். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் கழிவு நீரகற்று வாரிய ஊழியர்கள் குறிப்பிட்ட வீட்டிலுள்ள அடைப்புகள், சாலையில் தேங்கிய கழிவு நீர் அடைப்புகள் போன்றவற்றை சுத்தம்செய்து நமக்கு பெரும் உதவி செய்து வருகின்றனர். எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் சில வேலைகளை நாம் செய்ய தயங்குவோம். அதில் ஒன்று கழிவுநீர் சம்பந்தப்பட்ட வேலைகள். அந்த வேலைகளையும் அவர்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் செய்து வருகிறது.
அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவ பயிற்சி வைத்து நோய்த் தொற்று இருந்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல விஷயங்களை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் செய்து வருகிறது. அந்தவகையில் திருவிக நகர் ஆறாவது மண்டல குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று அதிகாரிகள் சற்று மாற்று யோசித்துள்ளபர். ஊழியர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும் வகையிலும் சிறப்பு தியான பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி கொளத்தூர் கணேஷ் நகர் ஜவஹர்லால் நேரு சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு தியான பயிற்சி நேற்று மதியம் நடைபெற்றது.
குஜராத்தில் இருந்து வந்த சிறப்பு வாய்ந்த நபர்கள் இந்த முகாமை வழி நடத்தினர். இதில் பிராண குணப்படுத்துதல் முறை மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சிவமுருகன், கண்காணிப்பு பொறியாளர் ராதாகிருஷ்ணன், பகுதி துணை பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.