×

சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்று அச்சம் கொள்கிறது ஆளும் தரப்பு. திருச்சி சிவா, ஐ.ஏ.எஸ். பதவிக்கு ஓய்வு உண்டு, ஆனால் நீங்கள் கொள்கையை பரப்பும் திமுக எனும் மூன்றெழுத்துக்கும், நம் பயணத்துக்கும் என்றும் ஓய்வில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி எழுதியுள்ள ‘எதிர்பாராத திருத்தம், மேடையெனும் வசீகரம், கேளுங்கள்-சொல்கிறேன், முரசொலியின் மடியில் தவழ்ந்தவை, காட்சியும் கருத்தும்’ ஆகிய 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். கவிஞர் வைரமுத்து, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினர். திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி ஏற்புரையாற்றினார். விழாவிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நூல்களை வெளியிட, முதல் பிரதியை திமுக ெபாதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். நூல்களை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் இன்று இருந்திருந்தால் வெளியிடப்பட்டிருக்க கூடிய 5 புத்தகங்களுக்காக சிவாவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். கலைஞருக்கு எப்போதும் சிவா பேச்சு என்றால் மிகவும் பிடிக்கும். மாநிலங்களவை பேச்சுகளுக்காக அடிக்கடி பாராட்டுவார். இப்படி சிறப்பான பாராட்டுகளைப் பெற்ற திருச்சி சிவா எழுதியிருக்கும் நூல்களின் தலைப்பே சிவாவை பற்றி சொல்லும். ‘எதிர்பாராத திருப்பம்’ – சிவாவின் சிறையைச் சொல்கிறது, ‘மேடையெனும் வசீகரம்’ – சிவாவின் மேடையைக் காட்டுகிறது, ‘கேளுங்கள் சொல்கிறேன்’ அவரின் வாதமாக இருக்கிறது, ‘முரசொலியின் மடியில் தவழ்ந்தவை’ அவரின் எழுத்தோவியமாக இருக்கிறது, ‘காட்சியும் கருத்தும்’ கலை, இலக்கியமாக இருக்கிறது.

அந்த வகையில், மேடை எழுத்து சிறை வாதம் கலை இலக்கியம் என்ற சிவாவின் ஐந்து முகங்களையும் வெளியிடும் மேடை இது. சிவா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, ‘‘அரசியல்வாதிக்குள் இருக்கும் இலக்கியவாதி” என்று சொல்வார். அதற்கு ஏற்றாற்போல், இவை அரசியல் புத்தகங்களாக மட்டுமில்ல, அரசியலுக்கு வெளியில் இருப்பவர்களும் படிக்கும் இலக்கிய நூல்களாகவும் அமைந்திருக்கிறது. திருச்சி சிவா பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இளைஞரணியை தொடங்கிய காலத்தில் ஐவரில் ஒருவர். அதன்பிறகு 10 ஆண்டுகாலம் இளைஞரணியின் துணைச் செயலாளர், 15 ஆண்டுகாலம் மாநில மாணவரணி செயலாளர், இப்போது கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் – என்று கழகப் பணியில் தனது உழைப்பால் உயரங்களை அடைந்தவர். நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால்தான் ஆளும் தரப்பு, “சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது” என்று அச்சம் கொள்கிறது. நாங்கள் இயக்கத்திற்குள் அடியெடுத்து வைத்த காலத்திலும் நம் இன எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு பா.ஜ.வினர் பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவது மட்டுமல்லாமல், அதை எப்படியெல்லாம் உண்மையாக மாற்றலாம் என்று யோசித்து, வரலாறுகளை மாற்றி எழுதுகிறார்கள்.

அவற்றை உடைத்தெறிய இன்னும் ஏராளமான திருச்சி சிவாக்கள் இந்த நாட்டுக்கு தேவை, இந்த இயக்கத்துக்கு தேவை இந்த நூல்கள் மாதிரி இன்னும் பல புத்தகங்கள் தேவை. இந்தப் புத்தகங்களை உருவாக்கித் தந்திருக்கும் திருச்சி சிவாவை மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார்: ”சிவா, தான் ஐ.ஏ.எஸ். ஆக முடியவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். நானும் படித்தேன். நான் அவருக்கு நிறைவாகச் சொல்ல விரும்புவது, திருச்சி சிவா அவர்களே, ஐ.ஏ.எஸ். பதவிக்கு ஓய்வு உண்டு, ஆனால் நீங்கள் கொள்கையைப் பரப்பும் திமுக எனும் மூன்றெழுத்துக்கும், நம் பயணத்துக்கும் என்றும் ஓய்வில்லை. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Shiva ,DMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Trichy Siva ,I.A.S. ,
× RELATED அறந்தாங்கியில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல்