×

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

செங்கோட்டை: செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் செங்கோட்டை அருகே புளியரை, மேக்கரை, வடகரை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த 1 மாத காலமாக யானைகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவது மட்டுமின்றி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள், பொதுமக்கள் பல முறை தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யானைகளை கண்துடைப்பிற்காக விரட்டுகின்றனர். ஆனால் அவைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார வனப்பகுதியில் சுற்றி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் 4 யானைகள் புகுந்தது. இதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த வாரம் அதிகாலையில் மீண்டும் மூன்று யானைகள் வடகரை அருகே உள்ள குளத்துக்கு வந்தது. இதனை அங்கு காவலுக்கு இருந்த விவசாயிகள், வனத்துறையினர் விரட்டினர். இந்த யானைகள் சில கிலோமீட்டர் தூரம் சென்று விட்டு மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, மா, பலா மரங்களை சேதப்படுத்தி செல்வதுடன், நெற்பயிர்களையும் மிதித்து துவம்சம் செய்து விருகிறது. தற்போது அதிகாலை ேநரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு யானைகள் உலா வர தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய நிலங்களுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில் யானைகள் நடமாட்டத்தை டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுவதற்கு முன்பு தடுக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் யானைகளை ஒரு பகுதியில் விரட்டுகிற போது யானைக் கூட்டம் தனித்தனியாக பிரிந்து வேறு சில பகுதிகளுக்கு சென்று விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செங்கோட்டை அருகே வடகரையில் மேட்டுக்கால் நெல்வாளம் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் மைதீன், முகமது இஸ்மாயில், சீமான், உசேன் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் 4 காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்தபடி ஜாலியாக உலா வந்தது. இதனை பார்த்த விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் சத்தமிட்டும், வெடி வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர். தொடர்ந்து கல்குளத்துக்கு யானைகள் நகர்ந்து சென்றது. வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சைரன் ஒலித்தும் யானைகளை விரட்டி அடிக்க முயன்றனர். ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே சுற்றித் திரிந்தது. இதனால் வனத்துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Puliyarai ,Makerai ,Vadakarai ,Kadayanallur ,Western Ghats ,Tenkasi ,
× RELATED புளியரையில் கலெக்டர், எஸ்பி தீவிர...