- வனத்துறையினர் பாராட்டு
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. அணையின் கரையோரம் சுமார் 3 கி.மீ. தொலைவில் வனத்துறையின் பராமரிப்பில் முதலலை பண்ணை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமராவதி அணையை காண வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள முதலை பண்ணையை கண்டு களிப்பதோடு, அதனுள் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்டவற்றில் மன மகிழ்ச்சியோடு விளையாடி செல்வர்.
இப்படி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த செந்தில் என்பவர் அமராவதி அணைக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் முதலை பண்ணையை சுற்றிப் பார்த்ததோடு, முதலைகளை படம் பிடித்தும், சிறுவர் பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்தனர். பின்னர் செந்தில் தனது குடும்பத்தினருடன் மூணார் நோக்கில் காரில் சென்றுள்ளார்.
9/6 செக்போஸ்ட் அருகே சென்றபோதுதான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணாதது செந்திலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீண்டும் தாங்கள் சுற்றிப்பார்த்த சுற்றுலாத்தலங்களில் இறங்கி தங்க சங்கிலியை தேட துவங்கினர். இந்நிலையில், அமராவதி சைனிக் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காக அமராவதி நகர் பகுதியில் அமைந்துள்ள கலைவாணி சைனிக் பயிற்சி பள்ளியில் கரூரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பிரகதீஷ் (10), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சரவண கிரிஷ் (10) ஆகிய இருவரும் கடந்த 3 மாதமாக 6ம் வகுப்பு சேர்ந்து பயில நுழைவு தேர்வினை எழுதும் பொருட்டு கலைவாணி சைனிக் பயிற்சி பள்ளியில் தங்கி படித்து வந்தனர்.
இவர்கள் தங்களது பெற்றோருடன் அமராவதி முதலை பண்ணைக்கு விளையாட சென்றபோது சிறுவர் விளையாட்டு பூங்காவில் கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளனர். அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் யாராவது சங்கிலியை தொலைத்து விட்டீர்களா என விசாரித்த பின்னர், முதலை பண்ணையில் இருந்த வனத்துறை ஊழியர்களிடம் தங்க சங்கிலியை ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சிறுவர்களின் நேர்மையை பாராட்டி, அவர்களது பெற்றோர்களுக்கு நன்றி கூறினர். தங்க சங்கிலியை தொலைத்த செந்தில் மீண்டும் அமராவதி முதலை பண்ணைக்கு வந்து தொலைத்த சங்கிலியை தேடியபோது, வனத்துறை ஊழியர்கள் தங்களிடம் சிறுவர்கள் ஒப்படைத்திருந்த தங்க சங்கிலியை எடுத்து கொடுத்துள்ளனர்.
செந்திலும் தனது செயினின் அடையாளம் கூறி அவற்றை பெற்றுக் கொண்டு சிறுவர்களின் நேர்மையை வெகுவாக பாராட்டி சென்றார். பயிற்சி பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள் முன்னிலையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிறுவர்கள் பிரகதீஷ் மற்றும் சரவண கிரிஷை பள்ளி முதல்வர் சண்முக சுந்தரம் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலியை கீழே கிடந்து எடுத்த சிறுவர்கள் அதை உரியவரிடம் ஒப்படைக்கும்படி வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்த சம்பவம் சக மாணவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
The post அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள் appeared first on Dinakaran.