பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு டிக்கெட் கவுண்டர் திடீர் என மூடப்பட்டதால் பயண சீட்டு எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தினமும் திருச்செந்தூர், மதுரை, சென்னை, பாலக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் இயக்கம் உள்ளது. முக்கிய விஷேச நாட்களில் திருச்செந்தூர் மற்றும் பழனிக்கும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள், டிக்கெட் வாங்கி செல்ல தனி கவுண்டர் ஏற்படுத்தப்பட்டது. மேலும் காலை நேரத்தில் வெகுதூரம் செல்லும் பயணிகள் வசதியாக முன்பதிவுக்கென தனி டிக்கெட் கவுண்டர் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டு, அனைத்து டிக்கெட்டும் ஒரே கவுண்டரில் வழங்கப்படுகிறது. ஒரே கவுண்டரில் நின்று டிக்கெட் பெற வேண்டியதால், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடத்திற்கு முன்பாக பயணிகள் பலர் டிக்கெட் எடுப்பதற்காக முண்டியடித்து செல்கின்றனர். மேலும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. எனவே கூடுதல் டிக்கெட் கவுண்டர் ஏற்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே நலசங்க அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.
சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நல்லூசாமி, இணை செயலாளர் திருமலைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ‘பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென ஒரு கவுண்டர் மூடுப்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி உடனடியாக ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர் ஏற்படுத்த வேண்டும். மேலும் ரயில்வே வாரியம் அனுமதித்த அனைத்து ரயில்களையும் பொள்ளாச்சி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் மூடல்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.