×
Saravana Stores

பிரதம மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் : கலெக்டர் தகவல்

கரூர், அக். 4: பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பெயன்பெற வங்கியுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டமானது பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ 6000ம் மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் மத்திய அரசால் வழங்கப்பட்ட திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரதம மந்திரி கிஷான் சம்மான நிதி திட்டத்தில் த ற்போது உதவித்தொகை விடுவிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, உதவித்தொகை இதுவரை வங்கி கணக்கிற்கு நேரடி நிதி விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் இனி பிஎம் கிஷான் உதவித்தொகையானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் 18வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணோடு இணைப்பது அவசியமாகும்.

கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மொத்தம் 2535 பிஎம் கிஷான் திட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணை தங்களது வங்கி கணக்கு எண்ணோடு இணைக்கவில்லை. எனவே, இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தினை எடுத்துச் சென்று இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லது தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதியதொரு சேமிப்பு கணக்கினை துவங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பிஎம் கிஷழன் திட்ட பயனாளிகள் குறிப்பிட்டவாறு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தொகை கிடைக்கும். மேலும், தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம். நடப்பாண்டில் 18வது தவணையாக அதாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் 2024 வரை உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பிஎம் கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்கது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை பல்வேறு முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். அதன்படி, உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பிஎம் கிஷான் இணையதளத்தில் இ&கேஒய்சி செய்ய வேண்டும் என கேட்கும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (ஒன் டைம் பாஸ்வேர்ட்) பிஎம் கிஷான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளலாம்.

அல்லது, பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் இ-கேஒய்சி எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பிஎம் கிஷான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், இந்த முறைகளில் பிஎம் கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக, கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மைத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதம மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் : கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District ,Collector ,Thangavel ,Minister ,Dinakaran ,
× RELATED தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள்...