×

ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கான கலைச்செம்மல் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஓவியம் மற்றும் சிற்ப கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை இயக்குநர் சே.ரா.காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் ஓவிய நுண்கலை குழு வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலை துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வாளர்கள் கூட்டம் கலை பண்பாட்டு துறை இயக்குநர் சே.ரா.காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓவியர்கள் சு.சந்தானக்குமார், எம்.சேனாதிபதி, வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோர் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மரபுவழி ஓவிய பிரிவில் ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்ப பிரிவில் லே.பாலச்சந்தர், கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவிய பிரிவில் கே.முரளிதரன், ஏ.செல்வராஜ், நவீனபாணி சிற்ப பிரிவில் ரா.ராகவன் ஆகிய கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கான கலைச்செம்மல் விருது: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,CHENNAI ,Director of Arts and Culture Department ,S.Ra.Gandhi ,Tamil Nadu Government Art and Culture Department ,
× RELATED அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி...