×

அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு அரசு ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தியது

சென்னை: அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை அதிநவீன ஒப்புயர்வு மையமாக தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 290 படுக்கைகள் மற்றும் 230 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுடன் செயல்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 1,800 முதல் 2,100 புதிய புற்றுநோய் நோயாளிகளுக்கும் 4,800 முதல் 5,400 தொடர் கவனிப்பு நோயாளிகளுக்கும் சேவை வழங்கி வருகிறது.

தினமும் சராசரியாக 110 முதல் 130 நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையும், 12 முதல் 15 புற்றுநோய் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. 2023ம் ஆண்டில் மட்டும் 69,721 வெளிநோயாளிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் புற்றுநோய் பராமரிப்பு சேவையை மேம்படுத்துவதற்காக, இந்த மருத்துவமனையை 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்தி, ‘‘புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையமாக” தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதி நவீன வசதி கொண்ட ஒப்புயர்வு மையம், 6,36,347 சதுர அடி (தரை + 5 தளங்கள்) பரப்பளவில், 250.46 கோடி ரூபாய் செலவில் முழுதும் மாநில அரசு நிதியின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை செயல்படுத்தும் விதமாக, 394 கூடுதல் பணியிடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையத்தில் ரத்தவியல், குழந்தை புற்றுநோயியல், தடுப்பு புற்றுநோயியல் / சமூக புற்றுநோயியல், மாநில புற்றுநோய் பதிவு, புற்றுநோய் வலி தணிப்பு சிகிச்சை பராமரிப்பு வழங்கப்படுகிறது.

இவைகளுடன் கூடுதலாக மனநல மருத்துவப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு, பல் அறுவை சிகிச்சைப் பிரிவு, மருத்துவ காஸ்ட்ரோநெட்டாலஜி பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, ரத்தமாற்ற மருத்துவம் பிரிவு மற்றும் எலும்பியல் பிரிவு ஆகிய துறைகள் இம்மருத்துவமனையில் பன்னோக்கு சிகிச்சை சேவையை வழங்கும் விதமாக ஏற்படுத்தப்படும். 2030ம் ஆண்டுக்குள் ஆரம்பநிலை புற்றுநோய் இறப்பை 3ல் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கை அடைவதில் இம்மருத்துவமனை பங்கு உள்ளது. இந்த ஒப்புயர்வு மையம், தமிழ்நாடு மற்றும் மற்ற இடங்களிலிருந்து வரும் எண்ணற்ற குடும்பங்களுக்கும் ஒரே இடத்தில் புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையை 24 மணி நேரமும் வழங்கும்.

The post அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு அரசு ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தியது appeared first on Dinakaran.

Tags : Anna Memorial Cancer Research Institute ,Tamil Nadu Government Centre of Excellence ,Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu Government Scholar ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!