*அழியும் பட்டியலில் உள்ள 21 இனங்கள் கண்டுபிடிப்பு
ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஹெர்பெட்டோபவுனா கணக்கெடுப்பில் அழியும் பட்டியலில் உள்ள 21 இனங்கள் உட்பட 33 ஊர்வன இனங்கள் மற்றும் 36 நிலம் மற்றும் நீர்வாழ்விகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை ஊர்வன மற்றும் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய இரு வாழ்விகளும் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய முதுமலை புலிகள் காப்பகத்தில் ஹெர்பெட்டோபவுனா எனப்படும் ஊர்வன மற்றும் இருவாழ்விகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடந்தது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் ஹெர்பெட்டாலஜிஸ்டுகள் சுஜித் வி. கோபாலன் மற்றும் ஷெர்ஜின் ஜோயல் மற்றும் 15 நிபுணர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் எம்.டி.ஆர் ஊழியர்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் முதல் விரிவான ஹெர்பெட்டோபவுனா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள கல்லம்பாளையம் முதல் 2000 மீட்டர் உயரம் வரை உள்ள சோலூர் வரையிலான பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பு, காப்பகத்தில் முன்னர் பதிவு செய்யப்படாத ஏராளமான உயிரினங்களை கண்டறிய உதவியாக இருந்தது. இதன்படி கணக்கெடுப்பில் 33 ஊர்வன இனங்கள் மற்றும் 36 வகை நிலம் மற்றும் நீர்வாழ்விகள் இனங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் பல மேற்குத்தொடர்ச்சி மலை அல்லது தென்னிந்தியாவை சேர்ந்தவை. ஏற்கனவே விபூதி மலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டவையுடன் சேர்த்தால் முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது மொத்தம் 55 ஊர்வன இனங்கள் மற்றும் 39 இருவாழ்விகள் இனங்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 40 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு சொந்தமானவை. பதிவு செய்யப்பட்ட இனங்களில் 21 இனங்கள் அழியும் பட்டியலில் உள்ளதாக ஐயுசிஎன் எனப்படும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மிகவும் அழியும் பட்டியலில் உள்ள கேவ் டேன்சிங் பிராக் (தவளை), இன்டர்நெயில் நைட் பிராக் ஆகியவை இரு வகை அழிந்து வரும் பட்டியலில் உள்ள இருவாழ்விகளான தவளைகளும் பதிவு செய்யப்பட்டன.
இதுதவிர அழியும் நிலையில் உள்ள என்டெமிக் ஸ்டார் ஐட் புஷ் பிராக் (தவளை), நீலகிரி என்டெமிக் குனூர் புஷ் பிராக் (தவளை), நீலகிரி புஷ் பிராக் (தவளை), நீலகிரிஸ் வார்ட் பிராக் (தவளை) ஆகியவை வனப்பகுதிகளிலும் புலவெளிகளிலும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
மேலும் பெட்டோம் லீப்பிங் பிராக் (தவளை), சுகந்தகிரி லீப்பிங் பிராக் (தவளை) ஆகியவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர்வன வகைகளான என்டெமிக் ஸ்டிரிப்டு கோரல் பாம்பு, கிங் கோப்ரா, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மலபார் பிட் வைப்பர், தி கலமரியா ரீட் பாம்பு, என்டெமிக் பரோவிங் பாம்பு, பெரோடெட் மலைப்பாம்பு, நீலகிரி டிவார்ப் கெக்கோ, கிரேஸ்புல்டே கெக்கோ உள்ளிட்டவைகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மாயாறு உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கர் முதலைகளையும் கண்டு பதிவு செய்யப்பட்டது.
வெற்றிகரமான தற்போதைய கணக்கெடுப்பின் மூலம், மழை உள்ளிட்ட மாறுபட்ட காலநிலைகளின்போது அடுத்து மேற்கொள்ளும் ஆய்வுகளில் கூடுதலாக உயிரினங்களை கண்டறிய உதவியாக இருக்கும். மேலும் எதிர்காலத்தில் அவற்றை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வதற்கான உத்திகளை வகுப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post முதுமலை புலிகள் காப்பகத்தில் 33 வகை ஊர்வன, 36 வகை நிலம், நீர் வாழ்விகள் பதிவு appeared first on Dinakaran.