சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் போலியாக பேராசிரியர்கள் பணியில் இருந்ததாக காட்டப்பட்ட விவகாரம் பெரும் விஸ்வரூபத்தை எடுத்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து கல்லூரிகளில் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் புதிய இணையதளம் ஒன்று திறக்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த இணையதளம் வாயிலாக பேராசிரியர்களின் ஆதார் எண் தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் சேவைகளை பயன்படுத்தி சரிபார்க்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த செயல்முறையை தடையின்றி செயல்படுத்துவதற்கு, இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) சான்றளித்த மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பரிந்துரைத்த கைரேகை ஸ்கேனர்களை மட்டுமே கல்லூரி நிர்வாகம் வாங்கி வைக்க வேண்டும் எனவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவை பரிந்துரைத்த ஸ்கேனர்களை கொண்டு மட்டுமே ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர வேறு எதுவும் கருவிகள் வாங்கப்பட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
The post மின்ஆளுமை முகமையின் சேவைகளை பயன்படுத்தி கல்லூரி பேராசிரியர்கள் விவரங்கள் சரிபார்க்கப்படும் : அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி appeared first on Dinakaran.