×

தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முன்னேற்றம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில், ஒன்றிய நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை-பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில், புதுடெல்லியில் 30.09.2024 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்குப்பெற்று, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழ்நாட்டிற்கு தேவையான புதிய திட்டப் பணிகளான;

1. கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மற்றும் மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை உயர்மட்டச் சாலை அமைத்தல்.
2. செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை, எட்டு(8)வழித்தடமாக தரம் உயர்த்துதல்.
3. திருவாரூர் புறவழிச்சாலை அமைத்தல்.
4. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை, நான்கு வழித்தடமாக மேம்படுத்துதல்.
5. விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் நான்கு வழித்தடமாக்கும் பணியினை விரைவுப்படுத்துதல்.
6. திருவாரூர் இரயில்வே மேம்பாலம் மறுகட்டுமானம் செய்தல்.
7. திருவண்ணாமலை மற்றும் பல்லடம் புறவழிச்சாலை அமைத்தல்.
8. வள்ளியூர் – திருச்செந்தூர் சாலை, கொள்ளேகால் – ஹானூர் சாலை, மேட்டுப்பாளையம் – பவானி சாலை, பவானி – கரூர் சாலை ஆகிய நான்கு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல்.
9. திருச்சி(பால் பண்ணை) முதல் துவாக்குடி வரை சாலையை மேம்படுத்துதல்.
10. கோயம்புத்தூர் புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
11. தாம்பரம் – மதுரவாயல் – மாதவரம் புறவழிச்சாலையில் (சென்னை புறவழிச்சாலை) விடுபட்ட இணைப்புகள் / வசதிகளை வழங்குதல்.

ஆகிய தேசிய நெடுஞ்சாலை பணிகளை வழங்கிட கோரிக்கைகளை அளித்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்து உரையாற்றினார். தொடக்கத்தில், 13.09.2024 அன்று திருச்சிக்கு வருகை தந்த ஒன்றிய அமைச்சருக்கு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசின் நிதியுதவியுடன் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளது என்று பாராட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஒன்றிய அமைச்சர், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஒன்றிய அமைச்சர், சில திட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் திட்டங்கள் முடிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட மாநிலத்தில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பான இடர்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு, முதலமைச்சர் அறிவுறுத்தியதால், அவருடைய வழிகாட்டுதலின்படி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் உள்ள இடர்பாடுகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தொடர்புடைய ராணுவம், வருவாய்த்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம்(TNEB), நீர்வளத்துறை(WRD), வனத்துறை(Forest), மாவட்ட ஆட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) / தேசிய நெடுஞ்சாலை(NH) அதிகாரிகளுடன் 23.09.2024 அன்று சென்னை தலைமைச் செயலக பழைய கூட்டரங்கில்(Old Conference Hall) ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, சில இடர்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் உள்ள இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெறும் NHAI மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் அனைத்தும் தொடர் கூட்டங்கள் நடத்தி இடர்பாடுகள் சரிசெய்து பணிகள் விரைவாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களின் உரையை தொடர்ந்து, ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அனைத்து திட்டங்களையும், ஒன்றன்பின் ஒன்றாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை ஆணையாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, இ.ஆ.ப., தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தனி அலுவலர் (டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் மு.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Nitin Gadkari ,Minister AV Velu ,Delhi ,Minister ,A. V. Velu ,Tamil Nadu ,Union ,Minister of ,Highways ,Transport ,
× RELATED மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர்