×
Saravana Stores

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா’ எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (அக் -1) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அவருடன் இயற்கை காய்கறி விவசாயிகளான பிரியா ராஜ் நாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பேசியதாவது,
“ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது நாம் உண்ணும் உணவு. இன்று நம் உணவு முறை சரியில்லை. அதனால் வீட்டுக்கொரு நீரிழிவு நோயாளி வீதிக்கொரு கேன்சர் நோயாளி என்ற சூழல் உள்ளது. காரணம் நாம் உண்ணும் உணவில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி. ஆனால் இன்று பூச்சிக்கொல்லியை பூச்சி மருந்து என அழைக்கின்றனர்.

ஒருவர் ஏதோ காரணங்களுக்காக தற்கொலை செய்ய முயன்றால், அது தொடர்பான செய்திகளில் பூச்சி மருந்தை உட்கொண்டார் என வருகிறது. மருந்து என்றால் அது உயிரை காப்பாற்ற வேண்டும். ஆனால் அது உயிரை எடுக்கிறது. எனவே அது விஷம். விவசாயிகள் விஷம் என்றால் அதை நேரடியாக வாங்கி பயன்படுத்த மாட்டார்கள். எனவே பூச்சி மருந்து என்கிற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இந்த நஞ்சு தெளித்த உணவை நாம் உண்ணும் போது அது விஷமாகி பல நோய்களை நமக்கு தருகிறது.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வது, இயற்கை விவசாயத்தில் நல்ல வருவாய் ஈட்டுவது என்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்திலும் மண் காப்போம் இயக்கம் சார்பில் இந்த ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா’ நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயியான திரு. தக்காளி ராமன் “விதை முதல் விற்பனை வரை தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் பேச உள்ளார். அத்தோடு காய்கறிகளை வைத்தே அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்பதை வலியுறுத்தி 12 வகையான காய்கறிகள் பற்றியும், அதை கொண்டு செய்யப்படும் காய்கறி வைத்தியம் குறித்தும் பேச உள்ளார் ‘காய்கறி வைத்தியர்’ திரு. அருண் பிரகாஷ்.

மேலும் பலப்பயிர் முறையில் சாகுபடி செய்து அசத்தும் கோவை விஜயன், FPO தொடர்பான விஷயங்கள் குறித்தும் வருவாயை இரட்டிப்பு ஆக்குவது எப்படி என்பது குறித்தும் சஹாஜா சீட்ஸ் நிறுவனர் திரு. கிருஷ்ண பிரசாத் பேச உள்ளார். அத்துடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக ‘மை ஹார்வஸ்ட் பார்ம்ஸ்’ நிறுவனர் திருமதி அர்ச்சனா பேசவுள்ளார். இவர்களோடு உணவு காடு பயிற்சியாளர் விதைத்தீவு பிரியா, முன்னோடி விவசாயிகளான பொள்ளாச்சி திரு. மாரிமுத்து, ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்களுடன், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-IIHR) முதன்மை விஞ்ஞானிகளான திரு. Dr. செந்தில்குமார், திரு. Dr.வி.சங்கர் ஆகியோர் பங்கேற்று மண் மற்றும் பயிர் வளம் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேச உள்ளனர்.

இது தவிர்த்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான தீர்வுகள், கீரை சாகுபடி, வருவாயை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக இயற்கை சந்தை, விதை திருவிழா மற்றும் இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை நடைபெற உள்ளது. மேலும் இதில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநில விதை பாதுகாவலர்கள் அரிய வகை விதைகளை உற்பத்தி செய்து அதை பரவலாக்கம் செய்யும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களை கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கொண்டு வருகின்றனர்.

மேலும் இயற்கை விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள், 50 வகையான மூலிகை செடிகள், 250 வகையான ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் காய்கறியில் ஐஸ்கிரீம் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறவுள்ளன.

நஞ்சில்லா இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.” இவ்வாறு அவர் பேசினார்.

The post ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Indian Traditional Vegetable and Seed Festival ,Isha Man Kappom ,Salem ,Coimbatore ,Isha Man Kappom Movement ,Salem Padmavani College ,Isha ,Kappom ,
× RELATED இயற்கை விவசாயத்தால் மண் வளம்...