சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல், விலை குறையாததால் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிவருவது தெரியவந்துள்ளது. ஐசிஆர் ஏவின் சமீபத்திய அறிக்கையில் இந்தியன் ஆயில் , இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 1லி. பெட்ரோலுக்கு ரூ.15 லாபமும், 1லி டீசலுக்கு ரூ.12 லாபமும் பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விற்பனை விலை மற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் கச்சா எண்ணெய் விலை மட்டும் கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில் 2023-24 நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டு லாபம் ரூ.86,000 கோடி எனவும் இது முந்தைய நிதி ஆண்டை காட்டிலும் 25 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2023-24 நிதியாண்டில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனது நிகர லாபமாக ரூ.16,000 கோடி காட்டியுள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டில் லாபம் 6,900 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. இதை போன்று மற்ற எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபத்தை காட்டியுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் கொள்ளை லாபம் பார்க்கும் நிலையில் மக்களுக்கு வழங்கக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மட்டும் அந்த நிறுவனங்கள் குறைக்க முன் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே ஒன்றிய அரசு தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய்க்கு நிகராக குறைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு appeared first on Dinakaran.