கூடலூர், அக் 1: கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட போஸ் பாரா மச்சி மற்றும் கொல்லி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வசிக்கும் பகுதிகள் வன நிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பு மக்கள் விவசாயம் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், விவசாய நிலங்கள் வனமாக மாற்றப்பட்டது குறித்த அறிவிப்புகளை அளித்துள்ளனர். வனநிலமாக அறிவிப்பதற்கு வசதியாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 16 ஏ பிரிவுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 75 ஏக்கர் நிலம் அடங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட நிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி விவசாயம் செய்தும் கடந்த 60 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் உள்ளது.
இவை வன நிலமாக்கப்பட்டது குறித்து அரசு கெஜட்டில் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல்களையே வனத்துறையினர் இப்பகுதி மக்களுக்கு அளித்துள்ளனர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கியதால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதுகுறித்து நேற்று மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post குடியிருப்பு கிராமப் பகுதிகள் வன நிலமாக அறிவிப்பு appeared first on Dinakaran.