திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500ம், மருத்துவப்படி ரூ.500ம் என ரூ.4 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. மேலும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச்சலுகையும் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500, மருத்துவப்படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024 – 2025 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘மகளிர் உரிமைத் தொகை, சமூகநலப் பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1.1.2024 நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்கவேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக்குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான பரிந்துரைச்சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மரபுரிமையர் (கணவன் மற்றும் மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டையின் படிகள் இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தினை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அக்டோபர் 31ம் நாளுக்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.