காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாறு மேம்பாலம் நமது தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக கான்கிரீட் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே விபத்து பகுதியாக மாறும் பாலாறு மேம்பாலம், வாகன ஓட்டிகள் அச்சம் என்ற தலைப்பில் நமது தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மிகவும் சேதமடைந்து அச்சமூட்டும் வகையில் இருந்த இணைப்புப் பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு அடைத்து பேட்ச் ஒர்க் செய்தனர்.
பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து பாலத்தை சீரமைக்க செய்தி வெளியிடும் தினகரன் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், தற்காலிக ஏற்பாட்டால் மகிழ்ச்சி அடைந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளான ஆக்கூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அளவுக்கதிகமான எம்.சாண்ட், கருங்கல், சரளை மண் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் இந்த பாலத்தை கடந்து செல்வதால் அடிக்கடி சேதம் அடைகிறது.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிப்காட் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவில் இந்த பாலத்தின்மீது செல்வதால் அடிக்கடி சேதம் அடைவதாக கூறப்படுகிறது. எனவே, புறவழிச்சாலையுடன் இணைக்க பாலாற்றில் மீண்டும் தரைப்பாலம் அமைத்து மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
The post செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சீரமைப்பு appeared first on Dinakaran.