×

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பழுதான ‘ரோப் கார்’ சேவை மீண்டும் தொடக்கம்

*5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

குளித்தலை : அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பழுதான ‘ரோப் கார் ’சேவை மீண்டும் துங்கியது. கடந்த 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

கோயில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு, தினம்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், மலையை சுற்றி கிரிவலம் வந்து மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். சித்திரை தேர் திருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

மலைஉச்சிக்கு முதியவர்கள், சிறுவர்கள் ஏறி செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.இதனால் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து ரூ.9.10 கோடியில் ரோப்கார் திட்டம் துவங்கப்பட்டு பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து கடந்த ஜூலை 24ம்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஜூலை 25ம்தேதி பலத்த காற்று அடித்ததால் ரோப் கார் பழுதடைந்தது. இதனால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் தொழில்நுட்ப குழுவினர் வந்து பழுதை சரி செய்தனர். இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தலைமையில் ஆய்வு பணி நடந்தது. பின்னர் பழுது முழுமையாக சரி செய்யப்பட்டது. மீண்டும் கடந்த 24ம் தேதி முதல் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்பட்டது.

மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்வதற்கு ரூ.50, மீண்டும் மலை உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு வருவதற்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரோப் கார் சேவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப் கார் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, காற்று நின்ற பின் மீண்டும் இயக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

அதனால் எவ்வித அச்சமின்றி பக்தர்கள் ரோப் காரில் சென்று வரலாம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 24ம் தேதி 119 பேரும், 25ம் தேதி 119 பேரும், 26ம் தேதி 250 பேரும், 27ம் தேதி 341 பேரும், நேற்று (28ம் தேதி) 401 பேரும் ரோப் காரில் பயணம் செய்துள்ளனர். கடந்த 5 நாட்களாக 1,230 பேர் ரோப் காரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கோயிலுக்கு ரூ.61,500 வசூல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கோயில் பாதுகாப்பு சங்க மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் கூறியதாவது: ரோப் கார் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பக்தர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக மலை உச்சிக்கு ரோப் காரில் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த சேவை தொடர்ந்து நல்ல முறையில் பக்தர்களுக்கு பயன்பட வேண்டும் என்றார்.சூரியனூர் மேலப்பட்டி பக்தர் ரம்யா கூறியதாவது:

எனது கணவரின் குலதெய்வ கோயிலான இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவோம். அப்போது நான் உட்பட முதியவர்கள் படிக்கட்டு வழியாக மேலே செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தோம். தற்போது ரோப் கார் சேவை திட்டத்தை துவங்கியுள்ளதால் எளிதாக மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பழுதான ‘ரோப் கார்’ சேவை மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ayeyarmalai Rathinakriswarar Temple ,Ayyarmalai Ratnakriswarar temple ,Ayyarmalai Rathinakriswarar temple ,Kulithalai ,Karur ,
× RELATED குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்