அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகளில் உள்ள 7 கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்கள் விவசாயம் செய்வதற்கு இந்த ஏரி பயன்பட்டு வந்தது. நகரமயமாதலில் விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறியதால், விவசாயம் செய்வார் எண்ணிக்கை குறைந்தது. சுற்றுப்பகுதி மக்கள் குளிக்க, துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கு இந்த ஏரியை பயன்படுத்தி வந்தனர். 1990 காலகட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள் கொரட்டூர் ஏரியில் கலந்ததால், நீர் முழுவதும் மாசடைந்தது.
மேலும், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததுடன், இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் விடப்பட்டு வருகிறது. எனவே, கொரட்டூர் ஏரி மாசடைவதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சீரமைக்க வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், இதுவரை கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை.இந்நிலையில், 2019ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் தலைமையில் 19 அரசு நிறுவனங்கள் அடங்கிய கமிட்டி அமைத்தது. இந்த 19 அரசு நிறுவனங்களும் தொடர் முயற்சி எடுத்து கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
இந்த கண்காணிப்பு குழுவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட கலெக்டர், சென்னை குடிநீர் மற்றும் கழிநீர் வாரியம், ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அடங்கும். இந்த அரசு நிறுவனங்களை எல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கிணைப்பு செய்து 6 மாதத்திற்கு ஒரு முறை மனுதாரரின் கருத்துகளையும் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மாசு கட்டுப்பாடு வாரியம் இதுவரை போதுமான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஏரி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில், கொரட்டூர் ஏரியை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை சந்தித்து ஏரியை மீட்பதற்கான மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி 2 முறை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளிடமிருந்து அபராதம் வசூலித்த ரூ.2 கோடியை கொரட்டூர் ஏரி புனரமைப்பு பணிக்கு செலவிட வேண்டும் என கோரிக்கையை வைத்து மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்படி பல்வேறு கட்ட போராட்டங்கள் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஏரியை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை செயலாளர்கள் ஆகியோருடன் வந்திருந்தார். அவரிடம் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. அதில், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏரியை வரையறை செய்து கரை அமைத்து பாதுகாக்க வேண்டும், ஏரியை ஆழப்படுத்தி நீர் கொள்ளளவை அதிகரிக்க செய்ய வேண்டும், ஏரியின் கலங்கலை உயர்த்தி கூடுதல்மழை நீரை தேக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. எனவே, கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ஏரியை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்துவதில் அலட்சியம்; தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் கொரட்டூர் ஏரி: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.