×
Saravana Stores

உரிமையாளர்களின் நலனை பாதுகாக்க, வசதிகளை நிர்வகிக்க அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள்: அரசாணை வெளியீடு

அம்பத்தூர், செப்.29: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தை உருவாக்கி, பதிவு செய்வது அவசியமாகும். இச்சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்களாவது இருத்தல் வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும். பழைய கட்டிங்களை மறுகட்டுமானம் செய்ய குடியிருப்பில் இருக்கும் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். கட்டிடத்தில் இருந்து யாரேனும் வெளியேற மறுத்தால் அந்த நபரை போலீஸ் துணையுடன் சங்கம் வெளியேற்றலாம். விதிகளின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்குதல் வேண்டும். விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறை அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024 ன் படி குடியிருப்போரை தொல்லை செய்யும் வகையில் ஒலி எழுப்பக் கூடாது, உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டே செல்லப்பிராணி வளர்க்க வேண்டும், விளம்பரம் உள்ளிட்ட போஸ்டர்களை சங்கத்தின் அனுமதியின்றி வைக்கக் கூடாது, ஜன்னல் மற்றும் பால்கனியில் துணி காயவைப்பது பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும், மின்சார இணைப்பு, அலைபேசி நிறுவுதல், டிவி ஆன்டனா, ஏசி உள்ளிட்டவற்றிற்கு சுவர்கள் மற்றும் மேல்தளத்தின் மூலம் வயர்களை இழுக்க சங்கத்தினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும், சங்கத்தின் அனுமதியில்லாமல் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

The post உரிமையாளர்களின் நலனை பாதுகாக்க, வசதிகளை நிர்வகிக்க அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Housing and Urban Development ,Kakarla Usha ,Dinakaran ,
× RELATED ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!