×
Saravana Stores

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, அரசுக்கு கடந்தாண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கான வரைவு அறிக்கை கால்நடை பராமரிப்பு துறையால் உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாய்கள் இனப்பெருக்க கொள்கை, விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நெறிசார்ந்த இனப்பெருக்கம், கண்மூடித்தனமான இனப்பெருக்கத்தை தவிர்த்தல், மரபு சார்ந்த பிரச்னைகளுடன் குட்டிகள் பிறப்பதை தவிர்த்தல், தனித்துவமான பல்லுயிர் பாதுகாப்பு மதிப்புகளுடன் கூடிய நாட்டினங்களை பாதுகாத்தல், வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்தல், இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களை பதிவு செய்தல், இனப்பெருக்கம் செய்வோர் உரிமம் பெறுதல், நாய்களுக்கு சான்றிதழ் பெறுதல், நாய் இனப்பெருக்க ஏஜென்சிகளை கண்காணித்தல் போன்றவை இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நாட்டினங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை மற்றும் கன்னி ஆகிய இனங்களை அங்கீகரித்தல், கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலை பட்டி, செங்கோட்டை நாய் ஆகிய இனங்களுக்கு அங்கீகாரம் அளித்து, பாதுகாத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, பாசெட் ஹவுண்ட், பிரஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், கீஷொண்ட், சோ சோ, நியூஃபவுண்ட்லாந்து, நார்வேக்லான் எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிஃப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்பம் போன்ற சூழலை தாக்குபிடிக்க கூடியதாக இல்லை. எனவே, அதுபோன்ற குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வளர்க்க உள்ள குறிப்பிட்ட நாய்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழை விலங்குகள் நல வாரியம் வழங்கும். நாய்களுக்கான உரிமையாளர்கள் குறித்த விவரங்கள், விலங்குகள் நல வாரியத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யவேண்டும். நாய் வளர்ப்போர், அதை வளர்க்கும் முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதன் மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்.

The post நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,High Court ,Department of Animal Husbandry ,Tamil Nadu government ,
× RELATED அரசு சட்ட கல்லூரிகளில் காலியாகவுள்ள...