×
Saravana Stores

போலியாக ரூ.50 கோடி மதிப்பு நிலம் பதிவு பத்திரப்பதிவுதுறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது: உதவியாளர் லதாவும் சிறையில் அடைப்பு

சென்னை: தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில், சேலம் மற்றும் மதுரை சரக டிஐஜியாக இருப்பவர் ரவீந்திரநாத் (56). இவர் சென்னையில் நிர்வாக பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்தபோது, தாம்பரம் வரதராஜபுரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 85 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சேலம் பதிவுத்துறை டிஐஜி அலுவலகத்தில் பணியில் இருந்த ரவீந்திரநாத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே கோவையில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோவையில் சார்பதிவாளராக இருந்த மணிமொழியான், மற்றும் உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மணிமொழியானிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தான் தாம்பரத்தில் சார்பதிவாளராக இருந்தபோது ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு, அடமான பத்திரத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே கிரையம் செய்ததுபோல் போலி ஆவணங்களை சேர்த்ததாகவும், அதை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது சென்னையில், மாவட்ட நிர்வாக பதிவாளராக இருந்த ரவீந்திரநாத், 8 முறை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ய அனுமதி அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும், தாம்பரத்தில் உள்ள நில மோசடி புகாரில் ரவீந்திநாத்துக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் லதா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post போலியாக ரூ.50 கோடி மதிப்பு நிலம் பதிவு பத்திரப்பதிவுதுறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது: உதவியாளர் லதாவும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : RAVINDRANATH ,LATHA ,Chennai ,Salem ,Madurai ,Sargak ,Tamil Nadu ,District Registrar ,Administrative Division ,Sayed Amin ,Thambaram Varadarajapuram ,Lada ,
× RELATED வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி...