×
Saravana Stores

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஐஜி தலைமையில் தனிப்படை விசாரணை: ஒரு வாரத்தில் முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டம்

திருமலை: திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் தொடர்பாக ஐஜி தலைமையில் இன்று தனிப்படையினர் விசாரணை தொடங்கினர். ஒரு வாரத்தில் விசாரணையை முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கடந்த வாரம் பகிரங்க குற்றம்சாட்டினார். இதையடுத்து நெய்யில் உள்ள கலப்பட விவரம் தொடர்பான முடிவுகள் வெளியானதால் நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக முதல்வர் சந்திரபாபு கடந்த சில நாட்களுக்கு முன் டிஜிபி துவாரகா திருமலாராவுடன் பல கட்டமாக ஆலோசனை நடத்தினார். லட்டு பிரசாத நெய்யில் எவ்வாறு கலப்படம் நடந்தது? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? இதற்கான பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான உண்மையை கண்டறிய தனிப்படை அமைக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு தெரிவித்திருந்தார். அதன்படி குண்டூர் சரக ஐஜி சர்வேஸ்வர் திரிபாதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் டிஐஜி கோபிநாத்ஜெட்டி, கடப்பா எஸ்.பி. அஸ்வர்த்தன்ராஜூ, திருப்பதி கூடுதல் எஸ்பி வெங்கட்ராவ், டிஎஸ்பிக்கள் சீதராராமராவ், சிவநாராயணசுவாமி, இன்ஸ்பெக்டர்கள் சத்யநாராயணா, உமாமகேஸ்வர், சூரியநாராயணா ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படையினர் இன்று மாலைக்குள் திருமலைக்கு வந்து முறையாக விசாரணையை தொடங்க உள்ளனர்.

முதற்கட்டமாக தற்போதைய தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளாராவை சந்தித்து லட்டு கலப்பட விவரம் குறித்து கேட்டறிய உள்ளனர். தொடர்ந்து கொள்முதல் பிரிவு பொதுமேலாளர் முரளிகிருஷ்ணா அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வழக்கு விவரங்களை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கொள்முதல் பிரிவில் நெய் ஆர்டர் செய்தது எப்படி? வழக்கமாக கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் தரத்தை எவ்வாறு கண்டறியப்படுகிறது? போன்ற விவரங்களை கேட்டறிய உள்ளனர்.

குற்றச்சாட்டு பதியப்பட்ட திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து முன்னாள் அறங்காவலர் குழு தலைவர், தேவஸ்தான செயல் அதிகாரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கொள்முதல் பிரிவு கமிட்டியினர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடித்ததும் இதன் இறுதி அறிக்கையை முதல்வர் சந்திரபாபுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர். முழு விசாரணையையும் ஒருவாரத்தில் முடித்து அறிக்கை சமர்பிக்க தனிப்படையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஐஜி தலைமையில் தனிப்படை விசாரணை: ஒரு வாரத்தில் முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : IG ,Tirumala ,Tirupati ,Lattu Prasad ,Tirupati Esumalayan Temple ,CM ,
× RELATED பூங்காவில் இரும்பு ராடு உடைந்து...