×
Saravana Stores

கூவம், அடையாறு ஆறுகளில் சிறுபுனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டம்

* சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது தமிழக அரசு
* ஆறுகள் மாசுபடாமல் தடுக்க நடவடிக்கை
* பசுமை எரிசக்தி மின்சார உற்பத்தியும் பெருகும்

* சிறப்புச் செய்தி
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளில் சிறிய நீர்மின் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசார் எரிசக்தி ஆதாரங்கள் முலமாகவும், சூரிய சக்தி, காற்றாலை, புனல் மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன. புதுப்பிக்கத்த எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அடையாறு, கூவம் போன்ற சிறிய ஆறுகளில், மழைக்காலத்தில் ஓடும் நீரை பயன்படுத்தி, சிறிய நீர் மின் நிலையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பசுமை எரிசக்தி கழகம் ஆராய்ந்து வருகிறது.

அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் தற்போது மாசடைந்து இருந்தாலும், முன் காலங்களில் சென்னையின் பிரதான நீர் ஆதாரங்களாக திகழ்ந்தது. கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகில் உள்ள கேசவரம் அணைக்கட்டில் ஆரம்பித்து 72 கி.மீ. நீளம் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. இதில் சென்னை நகர பகுதியில் மட்டும் 32 கி.மீ. செல்கிறது. அதேபோல அடையாறு ஆறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தொடங்கி 43 கி.மீ. பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த 2 ஆறுகளும் மழைக்காலங்களில் சென்னை நகரின் இயற்கை மழைநீர் வடிகால்களாக செயல்படுகிறது. சென்னையின் அடையாளமாக திகழும் கூவம் ஆற்றை மீட்டெடுக்கவும், தூய்மைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கூவம் ஆற்றை சுத்தம் செய்து படகு சவாரி உள்ளிட்ட அம்சங்களுடன் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த 2 ஆறுகள் மாசடைந்து இருந்தாலும் ஆண்டுதோறும் நதி வற்றாமல் நீர் சென்று கொண்டிருக்கும். இதனால் அடையாறு, கூவம் ஆறுகளில் சிறிய நீர்மின் நிலையங்கள் அமைப்பது பயனுள்ளதாக அமையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற திட்டங்கள் மூலம் ஆறுகள் மாசுபடாமல் தடுப்பதோடு மட்டும் அல்லாமல், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது சிறப்பான திட்டம் எனவும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் கூறியதாவது: கரியமில வாயு வெளியீட்டை குறைக்கும் முயற்சியில், 3 பசுமை எரிசக்திக் கொள்கைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான திறன் கொண்ட நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான பல்வேறு ஆற்றுப்படுகைகள் குறித்து ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு 2030ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் பசுமை எரிசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முக்கிய ஆறுகள் தவிர, அடையாறு மற்றும் கூவம் போன்ற சிறிய ஆறுகளையும் ஆய்வு செய்ய பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிப்பதற்காக மாநிலம் முழுவதும் 1,000 துணை மின் நிலையங்கள் மின் வாரியம் வைத்துள்ளது. தற்போது இந்த வசதிகள் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது.

இருப்பினும் எதிர்காலத்தில், ​​மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையை பராமரிக்க அதிக துணை மின்நிலையங்கள் உருவாக்குவது அவசியம். எனவே, கூடுதல் துணை மின்நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 5,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கினால், அடுத்த 6 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் இலக்கை எட்டுவது சாத்தியமாகும். இந்த இலக்கை அடைய சிறு புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் உதவிகரமாக இருக்கும். தமிழ்நாடு முழுவதும் 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் 1,050 மெகாவாட் திறனில் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர் மின் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கூவம், அடையாறு ஆறுகளில் சிறுபுனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Koovam ,Adyar rivers ,Tamil Nadu Government ,Tamilnadu ,Coovam ,Chennai ,Dinakaran ,
× RELATED எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை...