×
Saravana Stores

விதிமீறி குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் 10 மடங்கு உயர்வு சென்னையில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்த முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 2025-26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்கிறது.

இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபடக்கூடியது. சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டிடத்தின் அளவைப் பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது. முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கபட்டது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் வரும் நிதியாண்டுக்கான சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை விதி மீதி பொது இடங்களில் கொட்ட விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்தப்பட்டுள்ளது. அதாவது, கட்டிடக்கழிவுகளைக் 1 டன் வரை கொட்டினால், அபராதம் ரூ.2,000த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த முடிவு, வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காமல் இருந்தால், ரூ.100ல் இருந்து ரூ.1,000 ஆகவும் அபராதம் உயர்த்தப்படுகிறது. அதேபோல், பொது இடங்களில் குப்பை கொட்டினால், எரித்தால் ரூ.500ல் இருந்து, ரூ.5,000 ஆக அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ.17 கோடியில் சீரமைக்கவும், 81 இடங்களில் ரூ.12 கோடியில் 3டி மாடல் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 23 தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 63 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் பொது தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம் 110வது வார்டில் காம்தார் நகர் மெயின் ரோடு பிரபல திரை இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பெயரை சூட்டவும் மன்றத்தில் அனுமதி வழங்குவது உள்ளிட்ட 68 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
சொத்துவரி உயர்வு மற்றும் மயான பூமி, கழிப்பறைகள் தனியார்மயம் செய்யப்படுவதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். 975 இடங்களில் புதிய கழிப்பறை: மாநகராட்சி பகுதியில் 975 இடங்களில் 7,166 இருக்கைகள் கொண்ட புதிய கழிப்பிடங்கள் ரூ.11.67 கோடியில் கட்டவும், சைதாப்பேட்டை மற்றும் அடையாறில் தலா ரூ.9 கோடியில், தலா 70 படுக்கையில் கொண்ட நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகள் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post விதிமீறி குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் 10 மடங்கு உயர்வு சென்னையில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்த முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation Council ,Ribbon House ,15th Finance Commission ,Union Government ,
× RELATED 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை...