×
Saravana Stores

நமக்கு தெரிந்ததை கூட சிறு தொழிலாக மாற்றலாம்!

நன்றி குங்குமம் தோழி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல், படிச்சிருந்தாலும் நாம் கற்றுக் கொள்ளும் சின்ன கைவினைப் பொருட்கள் தயாரிப்பும் ஒரு பெரிய கை தொழிலாக மாறும். அந்த வரிசையில் எம்.பி. பட்டதாரி புனிதவள்ளி. படிப்பு முடிச்சதும் ஐ.டி நிறுவனத்தில் வேலை. ஆனால் குடும்பச் சூழலுக்காக வேலையை ராஜினாமா செய்தவர் தற்போது தொழில்முனைவோராக மாறியுள்ளார்.

‘‘எல்லோரையும் போல் நானும் படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல ஐ.டி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு திருமணமானது. குழந்தைகள் பிறந்த பிறகு என்னால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை. அதனால் வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், எனக்கு பிடித்த கிராஃப்ட் குறித்த வேலைகளை பொழுதுபோக்காகதான் செய்ய துவங்கினேன். ஆனால் அதுவே என்னுடைய தொழிலாக மாறும்னு நான் அப்போது நினைக்கவில்லை’’ என்றவர் தன் கலைப் பயணம் குறித்து விவரித்தார்.

‘‘நான் எவ்வளவு செய்து என் வீட்டை அலங்கரிப்பது. அதனால் அதனை என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் அதை பார்க்க அழகான பரிசுப் பொருட்கள் போல் இருப்பதால், அதனை ஏதாவது விசேஷங்களுக்கு பரிசாக கொடுப்பதாக கூறினார்கள். நான் செய்யும் இந்த பரிசுப் பொருட்களை அவர்களின் மனசுக்கு பிடிச்சவர்களுக்கு பரிசாக கொடுத்த போது அது ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. அதன் பிறகு என்னுடைய வீட்டில் கொலு வைத்த போது அதில் கார்த்திகை முருகர் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பது போல் செய்தேன். அது எல்லோரையும் கவர்ந்தது.

எங்க வீட்டிற்கு கொலு பார்க்க வந்தவர்களில் பலர் அதே போல் செய்து தரச்சொல்லிக் கேட்க ஆரம்பித்தனர். அப்போது தான் இதையே ஏன் தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் இந்த கைவினைப் பொருட்கள் அனைத்தும் தன் ஆர்வத்தின் பேரில்தான் கற்றுக் கொண்டுள்ளார்.‘‘எனக்கு கைவினைப் பொருட்கள் மேல் ஆர்வம் இருப்பதால், சின்ன வயசில் வார இதழ்களில் வரும் கைவினைப் பொருட்கள் குறித்த தயாரிப்பு முறைகளைப் பார்த்து அதை அப்படியே செய்து பார்ப்பேன். அப்படித்தான் நான் இதை செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு பொருளாக செய்ய செய்ய எனக்கு அதன் மேல் ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு தொலைக்காட்சியில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்த நிகழ்ச்சி வெளியாகும்.

அதன் மூலமாகவும் நான் கற்றுக்ெகாண்டேன். தற்போது யுடியூபில்தான் அனைத்தும் உள்ளதே. அதில் சுலபமாக செய்ய கற்றுத் தருகிறார்கள். அதனால் அதில் தற்போது சிலவற்றை கற்று வருகிறேன். நான் செய்வதைப் பார்த்து எங்க வீட்டில் அதற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்து என்னை ஊக்குவித்தாங்க. திருமணத்திற்குப் பிறகு என் கணவர் எனக்கு
உறுதுணையா இருக்கிறார். நான் கேட்கும் பொருட்களை அவரே போய் தேடி வாங்கி வந்து தருகிறார்’’ என்று கூறும் புனிதவள்ளி, ‘ஷீஷாப்பி’ என்ற பெயரில் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடு முழுக்க கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘எங்களின் பிரத்யேக தயாரிப்பு ரீயூசபில் ரங்கோலி கோலங்கள். மேலும் கொலுவில் வைக்கக்கூடிய பொம்மைகள், அலங்கார மலர்கள், தண்ணீரில் மிதக்கும் பூக்கள், அலங்கார தோரணங்கள், கிருஷ்ண பாதம், பிள்ளையார் சிம்மாசனம்… இது போல் நான் செய்யும் அனைத்துமே ரீயூசபில்தான். நிறுவனத்திற்கு சென்று வேலைக்கு போக வேண்டும் என்ற
அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே நமக்கு தெரிந்த விஷயங்களை கூட சிறு தொழிலாக மாற்றி அமைக்க முடியும்.

அதற்கான வழிகள் இன்றைய சமூகத்தில் நிறைய இருக்கு. அதை நாம் சரியான முறையில் பின்பற்றினால், நாமும் மாதம் கணிசமாக சம்பாதிக்க முடியும். இதன் மூலம் நம்முடைய கை செலவிற்கு மட்டுமில்லாமல், குடும்பத்தின் சின்னச் சின்ன செலவுகளுக்கும் உதவி செய்ய முடியும். அதுவே நமக்குள் ஒருவித தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்’’ என்றார் உற்சாகமாக புனிதவள்ளி.

தொகுப்பு: எஸ்.விஜய ஷாலினி

The post நமக்கு தெரிந்ததை கூட சிறு தொழிலாக மாற்றலாம்! appeared first on Dinakaran.

Tags : M. ,Sanitavalli ,T ,Dinakaran ,
× RELATED நீதிமன்றம் மத்திய அரசின் தலையில்...