- பொள்ளாச்சி, திருப்பூர்
- அமைச்சர்
- MRK பன்னீர்செல்வம்
- கோயம்புத்தூர்
- விவசாயிகள் தின விழா கண்காட்சி
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு அரசு
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய வேளாண்மை
*அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்
கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 4 நாட்கள் மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது. கண்காட்சியில், வேளாண் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உழவர் தின விழா கண்காட்சி துவக்க விழா பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், கிராமப்புற பெண் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் வேளாண் சாதனையாளர் நூல் தொகுப்பை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். புதிய பயிர் ரக தொகுப்பினை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இதில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவை, கரூர், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 6 விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதினை வழங்கினார். சிறந்த அங்கக வேளாண் இடுபொருள் உற்பத்தியாளர் விருதினை கும்பகோணம் சேர்ந்த மோகன் என்பவருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், புது டெல்லி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் துணை பொதுமேலாளர் ராம் மோகன் ரெட்டி, சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி கழக இயக்குனர் ஷேக் நா.மீரா மற்றும் வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் எம்ஆப்கே பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக முதல்வர் விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வருகிறார். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டது. தமிழில் பேசினால் கவுரவம் குறையும் என ஆங்கிலத்தில் பேசும் நபர்கள் மத்தியில், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக இயக்குனர், டெல்லி துணை பொதுமேலாளர் ஆகியோர் வேறு ெமாழியை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழில் உள்ள ஈடுபாடு காரணமாக தமிழில் பேசியது பாராட்டிற்குரியது.
இவர்களை போல் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் முழு ஈடுபாடுடன் தங்களின் பணியை செய்ய வேண்டும். வேளாண் பல்கலைக்கழகத்தை கலைஞர் துவக்கி வைத்தார். அவர் அன்று விதைத்த விதையால் தற்போது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்குள்ள கண்காட்சியில் 300 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பார்வையிட வேண்டும். தற்போது பாட்டில் தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலங்களில் அதிகளவில் மருந்துகள் பயன்படுத்தி வருவதால் தண்ணீரில் மினரல் குறைந்துள்ளது. மூன்று போகம் விளைந்த நிலத்தில் ஒரு போகம் விளையும் நிலமாக மாறியுள்ளது. தென்னை மரம் ஏற உள்பட விவசாய பணி செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.
விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயத்திற்கு நவீனமுறை தேவை என்ற நிலை இருக்கிறது. எங்களது முக்கியமான இரண்டு நோக்கம், விவசாயத்தை இயந்திரமயமாக்கல் மற்றும் விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவது ஆகும். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். . இவ்வாறு அவர் கூறினார்.
24 புதிய பயிர் ரகங்கள்
நெல் கோ ஆர்.எச்.5, நெல் கோ 58, நெல் ஏ.டீ.சி 59, நெல் கே.கே.எம் 1, மக்காச்சோளம் விஜிஐஎச் (எம்)2, இனிப்பு சோளம், கோ (எஸ்.எஸ்) 33, சோளம் 34, திணை ஏடிஎல்2, கேள்வரகு ஏடிஎல்2, பாசிப்பயிறு விபிஎன்7, நிலக்கடலை கோ 8, பருத்தி விபிடி2, தக்கை பூண்டு டி.ஆர்.ஓய்1, திராட்சை ஜிஆர்எஸ்(எம்.எச்)1, திராட்சை ஜி.ஆர்.எஸ்(எம்.எச்)1, பலா பி.கே.எம்2, வாழை காவெரி கஞ்சன், கத்திரி கோ 3, கொத்தவரை எம்டியு2, வெள்ளை தண்டு கீரை பி.எல்.ஆர்2, சிப்பு கீரை கோ6, பல்லாண்டு முருங்கை பி.கே.எம்3, சிவப்பு புளி பிகேஎம்2, தென்னை விபிஎம்6, குண்டு மல்லிகை கோ1 உள்ளிட்ட 24 வகையான புதிய பயிர் ரகங்கள் வேளாண் பல்கலையின் கிழக்கு பண்ணை வளாகத்தில் பயிரிடப்பட்டு உள்ளது.
கண்காட்சியை 3,400 விவசாயிகள் பார்வையிட்டனர்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உழவர் தின விழா முதல் நாளில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த 300 ஸ்டால்களை முதல் நாளான நேற்று 3,400 விவசாயிகள் மற்றும் 1,500 வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்கள் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த நவீன கருவிகள், விதைகள், புதிய ரக பயிர்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம்
கோவை தமிழ்நாடு பல்கலைக்கழக உழவர் தின விழா கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘‘தமிழக அரசு விவசாயிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தவிர, பெண்களுக்கான இலவச பேருந்துகள், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை போன்ற பல திட்டங்கள் மூலம் விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர். கோவைக்கு முதல்வர் வந்தபோது எல்லாம் புதிய திட்டங்களை அளித்துள்ளார். அரசிற்கு பொதுமக்கள், விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
The post பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது appeared first on Dinakaran.