ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட இரட்டை வழித்தட மின்சார புதிய ரயில் பாலம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இதற்கான இறுதி கட்டப் நிறைவு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நேற்று கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை ஏற்றி, இறக்கும் சோதனை முயற்சியில் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆனால் தூக்குப்பாலத்தை தாங்கி நிற்கும் வின்ச் ரோப்களின் நான்கு பக்கத்திலும் எடை சமநிலையில் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சோதனை முயற்சி தள்ளி வைக்கப்பட்டு எடையை சமநிலை செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். தூக்குப்பாலத்தின் லிப்டிங் எடையை சமநிலை செய்ய, அதிகாரிகள் 150 முதல் 300 கிலோ வரை எடையுள்ள இரும்பு பாக்ஸ்களை கிரேன் மூலம் தூக்குப்பாலத்தில் பொருத்தினர். காலையில் துவங்கிய எடை ஏற்றும் பணி மாலை வரை நடைபெற்றது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 25 டன் எடை தூக்குப்பாலத்தின் மேலே பளுவாக வைத்தனர். தொடர்ந்து இன்றும் இரும்பு பாக்ஸ் ஏற்றி சமநிலை செய்யும் பணி தொடரவுள்ளது. செங்குத்து தூக்குப்பாலத்தை தாங்கி நிற்கும் ரோப்களில் சீரான எடையில் பாலம் சமநிலையில் வைக்கப்பட்ட பிறகே லிப்டிங் செய்து சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிய ரயில் தூக்குப்பாலத்தில் 20க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பணிகள் இரவில் மேற்கொள்ளப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சீரான எடை இல்லாததால் தூக்குப்பாலத்தை இயக்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.