- கேரளா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாமக்கல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பச்சாம்பாளையம்
- குமாரபாளையம்
- நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்: கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாக சென்றுள்ளார். இதனால் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் முன் வாகனத்தை நிறுத்தி முயற்சி செய்தனர் ஆனால் கண்டெய்னர் லாரி போலீசார் மீது மோதும் வகையில் வந்ததால் போலீசார் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியை தாக்கினர். இதனால் நிலைகுலைந்து வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் அந்த வாகனத்தை சூழ்ந்து உள்ளே செல்ல முயற்சி செய்த போது அங்கு சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கண்டெய்னர் கதவை மூடிவிட்டு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றிய வளைத்தனர். இந்த நிலையில் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக யாருமற்ற வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். வாகனத்தை திறந்து பார்த்த போது அந்த இன்னோவா சொகுசு கார் ஒன்றும் பணம் கட்டு கட்டாக இருந்ததுடன் 6 குற்றவாளிகள் இருந்துள்ளனர்.
முன்னதாக கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM -களில் ரூ.65 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. காரில் வந்த கொள்ளையர்கள் 3 எந்திரங்களையும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 3-4 மணி இடைவெளியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையத்தில் பிடிபட்டனர். கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் என தெரியவந்தது. கேரளாவில் கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பிய நிலையில் அவர்களிடம் நாமக்கல் மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது..!! appeared first on Dinakaran.