சென்னை: திருப்போரூர் அருகே பர்னிச்சர் கடை செக்யூரிட்டி கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், லோடு இறக்கும் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பகுதி, ஓஎம்ஆர் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில், ஒரு பகுதியில் மூன்று மாடிகளைக்கொண்ட பர்னிச்சர் கடை அமைக்கப்பட்டு திறப்பதற்கான வேலை நடந்து வருகிறது. இந்த, பர்னிச்சர் கடையில் ஏற்கனவே செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தவர் நேற்று முன்தினம் வேலையை விட்டு நின்றுவிட்டார்.
இதனால், செக்யூரிட்டிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தனியார் நிறுவனம் பெரம்பலூர் மாவட்டம், வில்லுவாடி கிராமத்தை சேர்ந்த ராமர் (41) என்பவரை செக்யூரிட்டி வேலைக்கு அனுப்பியது. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பணியில் சேர்ந்த ராமர் கடையை பார்த்து வந்தார். வழக்கம்போல் பர்னிச்சர் கடையில் பொருட்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பணியை முடித்து கடையை மூடிவிட்டு சாவியை செக்யூரிட்டியான ராமரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
லோடு ஏற்றி இறக்கும் பணியை செய்து வந்த அசோக் என்பவர் மட்டும் அங்கேயே தங்கி உள்ளார். இவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், அவரைப்பற்றிய விவரம் எதுவும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் இல்லை என்று கூறப்படுகிறது. இரவு 10 மணியளவில் கடையை மூடிவிட்டு சென்ற ஊழியர் பாபு, செக்யூரிட்டியான ராமருக்கு போன்செய்து என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்துள்ளார். அதற்கு செக்யூரிட்டி ராமர், இங்கு லோடு இறக்கும் வேலை செய்யும் அசோக் குடித்துவிட்டு கடை எதிரே போதையில் கீழே விழுந்து கிடந்தார்.
அவரை, தூக்கிக்கொண்டு வந்து கடை நுழைவாயிலில் விட்டுவிட்டேன். பின், கதவை பூட்டிக்கொண்டு சாவி எடுத்துக்கொண்டு இரண்டாவது தளத்தில் தூங்க வந்து விட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 11 மணி வரை கடை திறக்கவில்லை. அருகேயுள்ள கட்டிடத்தின் உரிமையாளர், கடை இன்னும் ஏன் திறக்கப்படவில்லை என சந்தேகமடைந்து, பர்னிச்சர் கடையின் நுழைவாயிலில் வந்து பார்த்துள்ளார். அப்போது, கடை உள்பக்கமாக பூட்டியிருந்ததால் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஏறி பார்த்தபோது, உள்பக்கம் பூட்டியிருந்த மொட்டை மாடியின் கதவு திறந்து கிடந்தது.
அந்த வழியாக உள்ளே இறங்கி பார்த்தபோது இரண்டாவது தளத்தில், புதிய பர்னிச்சர்களுக்கு மத்தியில் செக்யூரிட்டி ராமர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனிருந்த அசோக் சம்பவ இடத்தில் இல்லை. இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏடிஎஸ்பி வேல்முருகன், மாமல்லபுரம் டிஎஸ்பி ரவிஅபிராம், திருப்போரூர் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு, டைனிங் டேபிள்களுக்கு பொருத்தப்படும் 3 அடி உயர மரக்கட்டையால் செக்யூரிட்டி ராமர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ராமரும், அசோக்கும் ேசர்ந்து மது அருந்தும்போது, ஏதாவது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு போதையில் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், தலைமறைவாக இருக்கும் அசோக்கை பிடித்தால் உண்மை தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், ராமரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட டைனிங் டேபிள் கட்டை மற்றும் சிசிடிவி பதிவு கருவியையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பர்னிச்சர் கடையில் செக்யூரிட்டி அடித்து கொலை: லோடு இறக்கும் ஊழியருக்கு வலை appeared first on Dinakaran.