×
Saravana Stores

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ110 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

* 2 ஷிப்பிங் ஏஜென்ட்களை கைது செய்து விசாரணை
* மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னையில் இருந்து சரக்கு கப்பலில், ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ110 கோடி மதிப்புடைய 110 கிலோ சூடோ எபிட்ரீன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு கப்பல், நேற்று முன்தினம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த சரக்கு கப்பலில் பெருமளவு போதைப்பொருட்கள் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளின் தனிப்படையினர் சென்னை துறைமுகத்துக்கு சென்று, புறப்பட தயாரான சரக்கு கப்பலை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்கு பெட்டகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, சந்தேகப்பட்ட ஒரு சரக்கு பெட்டத்தை சரக்கு கப்பலில் இருந்து கீழே இறக்கி வைத்து, திறந்து பார்த்து சோதனை செய்தனர். அந்த பெட்டகத்தில், சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, குவாட்ஸ் என்ற பவுடர் அனுப்பப்படுவதாகவும், 25 கிலோ கொண்ட குவாட்ஸ் பவுடர் மூட்டைகள் சரக்கு பெட்டகத்தில் 120 மூட்டைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குவாட்ஸ் பவுடர் என்பது, டியூப் லைட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுபவை. டியூப் லைட் உள்பகுதியில் வெள்ளை நிறத்தில் பூசப்பட்டு இருப்பவை குவாட்ஸ் பவுடர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தில், சரக்கு பெட்டகத்தில் உள்ள 120 குவாட்ஸ் பவுடர் மூட்டைகளை கீழே இறக்கி ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த குவாட்ஸ் பவுடர் மூட்டைகளுக்குள் தனியாக ஒரு கிலோ எடை கொண்ட மற்றொரு பார்சல் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் சூடோ எபிட்ரீன் என்ற போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபோல் 120 மூட்டைகளில் 110 மூடைகளில் பார்சல்கள் இருந்தன. இதை தொடர்ந்து, இந்த 110 சிறிய பார்சல்களிலும் இருந்த 110 கிலோ, சூடோ எபிட்ரீன் போதைப்பொருள், 2 சொகுசு கார்கள், ரூ3.9 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ110 கோடி என கூறப்படுகிறது. தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு பதிவு செய்த பெயர்களை ஆய்வு செய்தபோது, சென்னையைச் சேர்ந்த அபுதாஹிர் (30), அகமது பாஷா (35) ஆகிய இருவர் பெயரில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை துறைமுக கார்கோ ஷிப்பிங் ஏஜென்ட்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் பேரில், இந்த சரக்கு பெட்டகத்தை நாங்கள் பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு பதிவு செய்தோம். இதில் போதைப்பொருள் இருப்பது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினர். ஆனால், அதிகாரிகள் இவர்களின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், இரண்டு பேரையும் நேற்று மதியம் கைது செய்தனர். அதோடு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறோம். அப்போதுதான் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள். மேலும் வெளிநாட்டில் இருந்து இவர்களுக்கு வந்த போன் கால் நம்பர்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சூடோ எபிட்ரீன் என்பது போதைப்பொருட்கள், குறிப்பாக போதை மாத்திரைகள் மற்றும் மெத்தோ குயிலோன் போன்ற போதைப்பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருள் ஆகும். எனவே இந்த போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எங்களுடைய விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது’’ என்றனர்.

The post சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ110 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,AUSTRALIA ,Federal Revenue Intelligence ,Dinakaran ,
× RELATED காமன்வெல்த் மாநாடு நவ.5ல் ஆஸ்திரேலியா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு