×
Saravana Stores

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணையை கலெக்டர் வழங்கினார். திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசவன்பாளையம் ஊராட்சி பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சந்தித்து பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தேர்வான பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கினார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2030க்குள் “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடைவதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்கக்கோரி கலைஞர் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்புகளில் பதிவு செய்தோர் பயனாளிகளாக கருதப்படுவர். மேற்கண்ட கணக்கெடுப்பு திட்டங்களின் கீழ் ஊராட்சியின் இலக்கிற்கேற்ப தகுதியான பயனாளிகள் கிராம ஊராட்சி அளவிலான குழு இறுதி செய்யும். குழு உறுப்பினர்களாக ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளனர்.

குழு ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்திட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளி விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்று கலெக்டர் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்படும். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணி உத்தரவு வழங்கப்பட்டு பணி துவங்கப்படும். 2024-25-ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 4 ஆயிரம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 4954 தகுதியான பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீடொன்றக்கு ரூ.3.10 லட்சம் மானியத்தொகையாக வழங்கப்படும். இதை தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மனித சக்தி நாட்கள் ஊதியமாக வீடு கட்டும் பணிக்கும் 90 நாட்களுக்கு ரூ.28,710, கழிவறைக்கு 10 நாட்களுக்கு ரூ.3,190ம் வழங்கப்படும். மேலும் கழிவறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் மானியத்தொகை தனியாக வழங்கப்படும், ஆக மொத்தம் ரூ.3,53,900 பயனாளிக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடொன்றுக்கு 140 மூட்டைகள் தரமான சிமெண்ட் டான்செம் அரசு நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படுகிறது.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kosavanpalayam Panchayat ,Tiruvallur District ,Poontamalli Panchayat Union ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்ற வாலிபர் கைது