×
Saravana Stores

மிக்ஜாம் புயலால் சேதமடைந்து சீரமைக்கப்பட்டு வரும் ஆரணி ஆற்றின் கரைகள் மீண்டும் சேதம்: தரமற்ற பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ஊத்துக்கோட்டை, நவ. 16: பெரியபாளையம் அருகே, பாளேஸ்வரம் பகுதியில் சேதமடைந்த ஆரணியாற்றின் கரைகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மீண்டும் சேதமடைந்தது விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகம் முழுவதும் மிக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு இடங்களில் மக்கள், விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் ஆற்றின் கரைகளும் சேதமடைந்தன. இதன் ஒரு பகுதியாக ஆரணி ஆற்றின் கரைகளும் முற்றிலுமாக சேதமடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் இருந்து, மிக்ஜாம் புயலின் போது பெய்த மழையில் இரவோடு இரவாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம், பெரியபாளையம், ஆரணி, ஏ.என்.குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் சேதமடைந்தன. இதனையடுத்து, சேதமடைந்த ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ₹23 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாளேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவாயல், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து, பெரியபாளையம் ஆரணியாற்றின் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கரைகளை சீரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் புதிதாக அமைக்கப்பட்ட கரைகள் சேதமடைந்தது. தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதால்தான், தற்போது பெய்த லேசான மழைக்கே ஆற்றின் கரைகள் சேதமடைந்துள்ளது என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பாளேஸ்வரம் தடுப்பனை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் கரைகள் சேதமடைந்தது. இதனை கடந்த செப்டம்பர் மாதம் சீரமைத்தனர். ஆனால், தற்போது பெய்த லேசான மழைக்கே கரைகள் மீண்டும் சேதமடைந்துள்ளது தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதையே காட்டுகிறது. எனவே, தரமான முறையில் கரைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

The post மிக்ஜாம் புயலால் சேதமடைந்து சீரமைக்கப்பட்டு வரும் ஆரணி ஆற்றின் கரைகள் மீண்டும் சேதம்: தரமற்ற பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Arani river ,Mikjam ,Uthukottai ,Periyapalayam ,Baleswaram ,Araniya river ,Migjam ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே மேய்க்கால்...