திருவள்ளூர்: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகள், நகராட்சி சாலைகள், பேரூராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் கால்நடைகளை முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் சுற்றி வருகின்றன. இதில் மாவட்ட தலைநகரான திருவள்ளூரிலிருந்து சென்னை, திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை, ஸ்ரீ பெருமந்தூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் தோறும் 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இவை தவிர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வாகனங்களும், தொழிற்சாலைகளின் பேருந்துகளும், வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாலைகளிலும் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று, வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகளில் கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள சாலைகளிலும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டு, விடுகின்றனர். இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் படுத்துக் கொண்டும், நடந்து சென்று கொண்டும் இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் பேருந்துகள், லாரிகள். கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கும்போது மாடுகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க நினைத்து ஓட்டும்போது சில நேரங்களில் திடீரென அங்குள்ள கடைகளின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் கை, கால்கள் உடைந்தும், பலத்த காயம் ஏற்பட்டும், மண்டை உடைந்தும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக சுற்றிவரும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தகது. ஒவ்வொரு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து தணிக்கை செய்து கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விட்டு தவறிழைப்பவர்கள் மீது மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
The post சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்துகள், உயிரிழப்புகள்: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? appeared first on Dinakaran.