×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

* 471 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, அவர் 471 நாள் சிறைவாசத்திற்கு பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உட்பட மொத்தம் 47 முக்கிய நபர்கள் மீது பிரதான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, காவல்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்துறை என்று பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றப்பத்திரிக்கையை அடிப்படையாக கொண்டு அவர் மீதான மூன்று முக்கிய வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களை செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே இப்படிப்பட்ட சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்பதால் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம்சங்கர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முகாந்திரமே இல்லாத இந்த வழக்கில் என்ன தான் அமலாக்கத்துறை தரப்பில் விசாரிக்கிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. மேலும் எப்போது விசாரணை முடியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த வழக்கிலிருந்து உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்கள் வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா, அசானுதீன் அமனுல்லா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி நேற்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: செந்தில் பாலாஜியின் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கின் விசாரணை முடிவடைய 3 முதல் 4 வருடங்கள் வரை ஆகலாம். அல்லது அதற்கு மேலும் ஆகலாம். இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையே 7 ஆண்டுகள்தான். எனவே வழக்கு விசாரணை முடிவடையும் வரை செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருப்பது என்பது அவரது அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்து விடும். மேலும் இதுபோன்ற சூழலில் காரணம் எதுவும் இல்லாமல் ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது. அதேப்போன்று ஜாமீன் கேட்கப்படும் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால் அது அரசியல் சாசன பிரிவு 21ஐ தோற்கடிக்கும் விதமாக அமைந்து விடும். எனவே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததற்கான இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று அவர் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கிறார் என்பது ஆகும். இரண்டாவது, வழக்கு விசாரணை நிறைவடைய நீண்ட காலம் ஆகும் என்பது. இந்த இரண்டு காரணங்களையும் சேர்த்து நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்பதை அடிப்படையாக கொண்டு தான் செந்தில் பாலாஜிக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கானது தொடர்ந்து நடைபெறலாம். அதற்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை கலைக்கவோ அல்லது சந்திக்கவோ கூடாது. மேலும் இந்த வழக்கை பொருத்தமட்டில் சுமார் 2500 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதனை விசாரித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.

அதுவரையில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனை முன்னதாக உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி காட்டி உள்ளது. மேலும் இருநபர் பிணைத் தொகையாக தலா ரூ.25லட்சத்தை செந்தில் பாலாஜி செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்பதால், பாஸ்போட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் இருப்பதை உறுதி செய்யும் விதமாக விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் திங்கள் மற்று வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி விவகாரத்தில் எவற்றையெல்லாம் விசாரிக்கப்போகிறது என்பதை வாதங்களாகவோ அல்லது மனுவாகவோ விசாரணை நீதிமன்றத்தின் முன்னிலையில் கோரிக்கையாக வைக்கலாம்.

மேலும் விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை செந்தில் பாலாஜி தேவையில்லாமல் ஒத்திவைக்க கூறினாலும், அல்லது அற்பமான காரணங்களை கூறி வழக்கு விசாரணைகளுக்கு தடைகளை உருவாக்கினாலோ செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படலாம். விசாரணைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் அதற்கு எந்தவித காலதாமதங்களையும் ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் முறையாக ஆஜராக வேண்டும்.என்று உத்தரவிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து, அதுதொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தையும் முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, நீதிமன்ற சட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் கடந்த 15 மாதங்கள் அதாவது 471 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று மாலை வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023 ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 2 நபர் ஜாமீன் உத்தரவாதம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மா.கவுதமன், என்.பரணிகுமார் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜியை விடுவிக்க அனுமதி அளித்து முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மன்னிப்பு கேட்ட ஈடி
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் அமலாக்கத்துறை கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அதனை உன்மை என்று ஒப்புக்கொண்ட அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்பையும், வருத்தங்களையும் பகிரங்கமாக தெரிவித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சராக தடையில்லை
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினாலும், அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்க எந்தவித தடையையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜாமீன் நிபந்தனைகள்
1. செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் கீழமை நீதிமன்றத்தில் ₹25 லட்சம் மதிப்பிலான இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்
2. திங்கள் மற்றும் வெள்ளி என வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
3. அமலாக்கத்துறை விசாரணை அல்லது கிழமை நீதிமன்றத்தின் விசாரணைகளில் சரியான காரணங்கள் இல்லாமல் வாய்தா கேட்கக் கூடாது.
4. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
5. வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைப்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செந்தில் பாலாஜி ஈடுபடக்கூடாது.
6. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
7. வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது.

2 முறை தீர்ப்பு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட இந்த வழக்கில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 12ம் தேதி முதலாவதாக தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து பின்னர் அதனை ரத்து செய்து விட்டு மீண்டும் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தான் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் விசாரணையில், இரண்டு முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது வரலாற்று நிகழ்வாகும்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Supreme Court ,New Delhi ,Puzhal Jail ,Chennai ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில்...