×
Saravana Stores

பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழாவில் 100 கிடா வெட்டி கமகமக்கும் கறி விருந்து: ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 100 கிடா வெட்டி, 200 மூட்டை அரிசியில் கமகமக்கும் கறி விருந்து தயாரித்து, விடிய விடிய பரிமாறப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் சடையாண்டி சுவாமியை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், வேண்டுதல் நிறைவேறவும் சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக சடையாண்டி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டன. பின்னர் 200 மூட்டை அரிசியில் கறி விருந்து சமைக்கப்பட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

அதன்பின் விழாவில் பக்தர்களுக்கு விடிய, விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது. இதில், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாமி சாட்டுதல்
காவல் தெய்வமான சடையாண்டி கோயில் திருவிழா முடிந்தவுடன், அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி பெரியமுத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்காக சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி சாட்டபட்ட 15வது நாளில் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறும்.

The post பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழாவில் 100 கிடா வெட்டி கமகமக்கும் கறி விருந்து: ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 100 KIDA CUT ,KAMAGAMAKUKA CURRY FEAST ,FESTIVAL ,PATIVIRANPATI ,Pativeeranpatty ,Marudanadi ,Ayyampalayat ,Dindigul District ,Kida Cut Kamagamakum Curry Feast ,Temple Festival ,Pativeeranpati ,
× RELATED தீப திருவிழா: அமைச்சர்கள் ஆலோசனை