விருதுநகர்: சிவகாசி, கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் விருதுநகருக்குள் வந்து செல்ல கோரி இன்று நகரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. விருதுநகரில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இது முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள், அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் கடந்த ஆக.21ம் தேதி முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள மீனாம்பிகை பங்களா நிறுத்தம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று வந்த மதுரை, கோவில்பட்டி, சிவகாசி பேருந்துகள் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், பழைய பஸ் நிலையம் பகுதி மக்கள், நகர் பகுதி மக்கள் மதுரை மற்றும் சிவகாசி, கோவில்பட்டி செல்வதில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி செல்லும் பேருந்துகள், அதுபோன்று சிவகாசி, கோவில்பட்டியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள், விருதுநகருக்குள் வந்து செல்ல வேண்டும் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி விருதுநகரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. பழைய நிலையம், அக்ரஹார தெரு, மீனாம்பிகை பங்களா ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள் என 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் பாஸ்கரன், செலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
The post சிவகாசி, கோவில்பட்டி பஸ்கள் நகருக்குள் வந்து செல்லக்கோரி விருதுநகரில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.