- உயர் நீதிமன்றம்
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- சென்னை
- வி. சந்திரா
- ராஜா
- அண்ணாமலைபுரம்
- சென்னை அடார்
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை: சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வி.சந்திரா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் 100% மாற்றுத்திறனாளியாக உள்ளேன். 2022ல் குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், மயிலாப்பூரில் வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டம் என்ற பெயரில் குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டிய வீடுகளில் எனக்கு மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்க கோரி 2022 செப்டம்பர் 21ம் தேதி வாரியத்திடம் மனு கொடுத்தேன்.
ஆனால் நடவடிக்கைஎடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு வீடு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரங்களில் பரிசீலிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் மனுவை பரிசீலித்த வாரியம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து சந்திரா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வாரியத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்திரா மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி, மனுவுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் 3 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டுள்ளது.
The post வீடு ஒதுக்கீடு கோரி 100% மாற்றுத்திறனாளி பெண் வழக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.