நாமக்கல்: கேரளாவில் பார்க்கிங் வசதி செய்து தரக்கோரி 400 எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு, தென்மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான 5 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து, சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயுகளை கொண்டு செல்லும் பணியில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம், பாலக்காடு அருகில் காசாகோடுவில் உள்ள மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு (பிபிசி) சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இங்கிருந்து கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு காஸ் டேங்கர் லாரிகள் மூலம் சமையல் காஸ் எடுத்துக்செல்லப்படுகிறது.
அந்த இடத்தில் காஸ் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைப்பதற்கு, பிபிசி நிர்வாகம் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், டிரைவர்களை தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக 400 எல்பிஜி டேங்கர் லாரிகள், லோடு ஏற்றி செல்லும் பணியில் ஈடுபடாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘பிபிசி ஆயில் நிறுவன அதிகாரிகள், காஸ் டேங்கர் லாரிகளை பார்க்கிங் செய்வதற்கு தனி இடம் ஒதுக்கி தருவதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கூறினார்கள். ஆனால் அதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. சாலையோரம் லாரிகளை நிறுத்துவதால், பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இது பற்றி நேற்று ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, ஆயில் நிறுவன அதிகாரிகள் லாரிகள் பார்க்கிங் இடத்தை ஒதுக்கி தரும் வரை, காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்’ என்றார்.
The post கேரளாவில் பார்க்கிங் வசதி செய்து தரக்கோரி 400 எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.