- அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- சுற்றுலா அபிவிருத்தி கார்ப்பரேஷன்
- நிர்வாக இயக்குனர்
- சமயமூர்த்தி
- EAP
- நெதர்லாந்து
- ஆம்ஸ்டர்டம்
- விரும்தோம்பல்
சென்னை: நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு தமிழர்களின் விரும்தோம்பலில் மகிழ வேண்டும் என சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி, இ.ஆ.ப., அழைப்பு விடுத்துள்ளார். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் 24.9.2024 அன்று சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஹேக் நெதர்லாந்து இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வணிகம்) சத்யா பினிசெட்டி அவர்கள் முன்னிலையில் ஐரோப்பியர்கள் குறிப்பாக டச்சுகாரர்களை ஈர்க்கும் வகையில் சுற்றுலா கவன ஈர்ப்பு RoadShow நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுற்றுலா கவன ஈர்ப்பு ரோட்ஷோவை ஹேக் நெதர்லாந்தின் இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வணிகம்) சத்யா பினிசெட்டி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து தெரிவித்த அவர், டச்சு மக்களுக்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்ய சுற்றுலா பயண முகவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான கோயில்கள், பண்பாட்டு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், நீலகிரி மலை இரயில், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆறு உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை தொடங்கி கன்னியாகுமரி கடற்கரை வரையில் 1,076 கி.மீ நீளத்திற்கு, இந்தியாவின் மொத்த கடற்கரைகளின் நீளத்தில் 13 சதவிகிதத்தை கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி என மலைவாழ் சுற்றுலா தலங்களும், குற்றாலம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் வெள்ளி அருவி, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்கா உள்ளிட்ட 5 தேசிய பூங்காக்களும், 18 வன உயிரின சரணாலயங்களும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட 17 பறவைகள் சரணாலயங்களும் தமிழ்நாட்டின் இயற்கை சூழல் குறித்து தெரிவிப்பதோடு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகளைப் போன்றே சுற்றுலா பயணிகளையும் பறந்து வரச் செய்கின்றன. மேலும் 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பல்வேறு தேவாலயங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.
வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங்கடல் ஆகிய 3 கடல்களும் ஒருசேர இணைந்துள்ள இந்தியாவின் தென்முனையாக அமைந்துள்ள கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் காலையில் சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் அஸ்தமனத்தையும் ஒருசேர கண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள். இங்கு உலகிற்கே வாழ்வியல் நெறிகளை வழங்கிய அய்யன் திருவள்ளுவருக்கு கடலுக்கு மத்தியில் 133 அடி உயர பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டு உலகின் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமாக திகழ்கிறது.
விவசாயிகளின் வாழ்விற்கு வித்திட்ட சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருவிழாவான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாவாகும். இத்திருவிழாவினையொட்டி ஜல்லிக்கட்டு (காளைகளை அடக்குதல்) போன்ற பண்டிகைகள் உலக சுற்றுலா பயணிகளின் கவனம் ஈர்த்த முக்கிய நிகழ்ச்சிகளாகும். தனித்துவம் வாய்ந்த பல்சுவை கொண்ட உணவு வகைகள், கைவினைப் பொருட்கள், பல்வேறு கலைகள் தமிழ்நாட்டின் திறமைகளை உலகிற்கு பறைசாற்றுகின்றன. இவை அனைத்தும் உலக சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போதும் அவர்களுக்கு “கதைகள் என்றும் முடிவடையாத” (STORIES NEVER END) சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டினை திகழச் செய்கின்றன.
1602 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வருகையிலிருந்து, டச்சுக்காரர்களுடன் இந்தியா நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய சந்தை எங்களுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது. அவை அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றன. டச்சு சந்தையில் முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இருந்து நேரடி விமானங்கள் மற்றும் மத்திய கிழக்கு வழியாக வலுவான இணைப்பு உள்ளது.
இந்தியாவின் துடிப்பான கலாச்சாரங்கள், கவர்ச்சியான இடங்கள் மற்றும் நீடித்த நினைவுகள் ஆகியவற்றை ஒருசேர கொண்ட மனித நாகரிகத்தின் இதயப்பகுதிகளில் ஒன்றான தமிழ் நிலத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். தமிழ்மொழி உலகின் பழமையான பேசும் மொழிகளில் ஒன்றாகும். எனவே இங்கு வருகை தந்துள்ள சுற்றுலா பங்குதாரர்கள் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள பயணத்திட்டங்களை தொகுத்து, தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழர்களின் வரவேற்பிலும், பண்பாட்டிலும், விரும்தோம்பலிலும் மகிழ வேண்டும் என்று நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்ட பரதநாட்டிய நடனத்தை சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வருகை தந்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுக்கு சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்கப்பட்ட தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள் குறித்த புத்தகங்கள், வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ், கையேடுகள், மற்றும் நினைவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
The post நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு விரும்தோம்பலில் மகிழ அரசு அழைப்பு..!! appeared first on Dinakaran.