ஈரோடு, செப். 26: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடுக்கான திட்டம் குறித்து மூன்று நாள் சிறப்பு முகாம் இன்று(26ம் தேதி) முதல் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இநதிய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி(IPPB), பொதுகாப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு ஆண்டிற்கு ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடும், ரூ.750 செலுத்தி ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அனைத்து வகை பணி செய்பவர்களுக்கும் இந்த விபத்து காப்பீடு பெறலாம்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மொத்தமாகவும் காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகங்களிலேயே சிறப்பு முகாம் அமைத்து விபத்துக் காப்பீடு பெறும் வசதி செய்யப்படும். விண்ணப்ப படிவம், அடையாள சான்று நகல் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம், டிஜிட்டல் முறையில், இந்த பாலிசி வழங்கப்படும். ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு மூலம், விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம் வரையும் , விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினமும் ரூ.1,000 வீதம் 10 நாட்களுக்கும்,
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினர் பயண செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இக்காப்பீடு குறித்து ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் இன்று(26ம் தேதி) முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள், தபால்காரர்கள் மூலம் விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தபால் அலுவலகங்களில் விபத்து காப்பீடு; 3 நாள் சிறப்பு முகாம்: இன்று முதல் துவக்கம் appeared first on Dinakaran.