×

அரசு அலுவலக சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் அகற்றம்

 

ஈரோடு, நவ. 13: ஈரோடு மாநகரில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஈரோடு மாநகரில் அரசுக்கு சொந்தமான கட்டிங்களின் சுற்றுச்சுவர்கள், பஸ் ஸ்டாப், மேம்பால சுவர் போன்றவற்றில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எவ்வித அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் போன்றவை ஒட்டப்பட்டிருந்தது.

மேலும், ஈரோடு காந்திஜி சாலையில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருக்குறள், சுவர் ஓவியம் மாநகராட்சி சார்பில் வரையப்பட்டிருந்தது.  அந்த சுவரின் அழகை கெடுக்கும் வகையில் விளம்பர போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு அலுவலகம், பொது இடங்களில் சுற்றுச்சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களை அகற்றிட மாநகராட்சி ஆணையர் மனிஷ் உத்தரவிட்டார்.

இதன்பேரில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஈரோடு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை அகற்றினர். மேலும், விளம்பர போஸ்டர்களை அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டால் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நிறுவனம் மற்றும் தனி நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு அலுவலக சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode city ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு