திருமங்கலம் செப். 26: மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் செப்டம்பர், அக்டோபர் மாத மழைகால கட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலும், மழை இல்லாத இந்த நேரத்தில் வழக்கம் போல் பரவிவருகிறது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வார்டுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் தலா 5 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கொசு வலைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ராம்குமார் கூறுகையில், ‘‘பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புளூ காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவும். தற்போது டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பும் வர வாய்ப்புகள் உள்ளதால் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தினங்களுக்கு மேல் காய்ச்சல் தொடரும் பட்சத்தில், அவர்களை நாங்களே சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சையளிக்க உள்ளோம். காய்ச்சலுக்கான அனைத்து வித பரிசோதனைகளும் இங்கு நடத்தப்படுகிறது. உடல் அசதி காரணமாக நோயாளிகளுக்கு தேவையான குளுக்கோஸ், மாத்திரை உள்ளிட்ட அனைத்தும் வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்து புளூ, மலேரியா, டெங்கு பாதிப்பு இருக்கிறது என்பது தெரியவந்தால், அவர்களை இந்த சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படும்’’ என்றார்.
The post திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்: பரிசோதனை பணிகளும் தீவிரம் appeared first on Dinakaran.