சென்னை, செப்.26: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா செயல்பட்டு வருகிறார். இவரது தபேதாராக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான மாதவி பணி செய்து வந்தார். மாதவியின் பணி என்பது பிற தபேதார்களை போன்றது தான். கையில் செங்கோல் ஏந்துவது, வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதுதான் தபேதாரின் பணி. சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் மாதவி செல்வார். மாதவி லிப்ஸ்டிக் அணியும் பழக்கத்தை வைத்துள்ளார். இதனால் லிஸ்ஸ்டிக் அணியக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட மாதவி லிப்ஸ்டிக் அணிந்து வந்துள்ளார்.
கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் இருந்து தபேதார் மாதவி லிப்ஸ்டிக் அணிந்துள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் கண்டித்துள்ளார். இந்த கண்டிப்பை தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் கண்டித்த அடுத்த சில நிமிடங்களில் தபேதார் மாதவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேயர் பிரியாவின் அலுவலகத்தில் பணி செய்த தபேதார் மாதவி தற்போது மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு தபேதாருக்கான காலியிடம் உள்ள நிலையில் மாதவி அங்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி மேலும் கடமை தவறுதல், பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருத்தல், சீனியர்களின் உத்தரவுகளை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு இந்த மெமோ என்பது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கரிடம் இருந்து மாதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி மெமோ அனுப்பப்பட்டது. அந்த மெமோவுக்கு மாதவி அளித்த பதிலில், ‘நீங்கள் லிப்ஸ்டிக் அணியக்கூடாது என கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் அணிந்தேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் நடக்கிறது. உங்களின் மெமோ என்பது எனது பணி நேரத்தில் நான் வேலை செய்யாமல் இருக்கும்போது மட்டுமே பொருந்தும்’ என பதிலளித்துள்ளார்.
இது குறித்து தபேதார் மாதவி தெரிவிக்கையில்,என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிடமாற்றம் செய்துவிட்டனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து அருகே உள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரபாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் மணலிக்கு மாற்றம் செய்துவிட்டனர்’ என குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து மேயர் பிரியா அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், தபேதார் மாதவி லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிடை மாற்றம் செய்யப்படவில்லை, பணியை சரிவர செய்யாத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு விளக்கமளித்துள்ளது. பெண் தபேதார் மாதவிக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் கணவரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 வயது முதல் லிப்ஸ்டிக் போடுகிறேன் தபேதார் மாதவி நிருபர்களிடம் கூறியதாவது:
15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரியும் நிலையில், எனது வேலையில் எந்தவிதமான தொய்வும் இருந்ததில்லை. எனக்கு லிப்ஸ்டிக் அணிவது மிகவும் பிடிக்கும், 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு. இதை போடக்கூடாது என்று எச்சரித்தார்கள். என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் சிலரையும் அவ்வாறு கூறினார்கள். இதை எல்லாம் என்னால் மாற்ற முடியாது. எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் நான் போட முடியும். மெமோ அனுப்பப்பட்ட தேதியான ஆகஸ்ட் 6ம் தேதி அரை மணி நேரம் தாமதமாக அதாவது 10.30 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தேன். காலில் சிறிய காயம் இருப்பதால் தான் தாமதம் ஏற்பட்டது. எனது உதட்டு சாயத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மேயர் கூறிய உத்தரவை மீறியதுதான் பணியிட மாற்றத்துக்கு காரணம். தற்போது, மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.
The post சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம் appeared first on Dinakaran.