இடைப்பாடி: இடைப்பாடி அருகே, ஏற்கனவே 3 குழந்தைகளை விற்ற தொழிலாளி 6வதாக பிறந்த தனது ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்க முயன்றார். அவரையும் புரோக்கர்கள் 2 பேரையும், போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு(25). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி. இவர்களுக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இவர்களில் 2 குழந்தைகள் இறந்து விட்டன. குடும்ப வறுமையால் தவித்த சேட்டு, 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையை புரோக்கர்கள் மூலம், விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், குண்டுமல்லிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையையும் விற்பனை செய்ய, புரோக்கர்களான இடைப்பாடி கவுண்டம்பாளையம் செந்தில்முருகன்(46), முனுசாமி (46) ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் விசாரித்ததில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தேவராஜ், ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், முறைப்படி தத்து கொடுக்க வற்புறுத்தியுள்ளார். அந்த நடைமுறைக்கு சேட்டு ஒத்து வராததால், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீமுரளிக்கு, தேவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில், அதிகாரிகள் சேட்டுவை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சட்டவிரோதமாக ஏற்கனவே 3 குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சேட்டு மற்றும் புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி ஆகியோரை கைது செய்தனர்.
The post 3 குழந்தையை விற்ற தந்தை கைது: 6வதாக பிறந்த குழந்தையை விற்க முயன்றபோது சிக்கினார் appeared first on Dinakaran.