- கிண்டி ரேஸ் கிளப் கிரீன் கார்டன்
- சென்னை
- பசுமை தீர்ப்பாயம்
- தெற்கு பிராந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்
- வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம்
- கிண்டி ரேஸ் கிளப் பசுமை பூங்கா
- தின மலர்
சென்னை: சென்னையில் பசுமை பூங்கா உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவு என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மனுவை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளச்சேரியை சுற்றி எந்த நீர்நிலைகளும் இல்லை. ஏற்கனவே உள்ள நீர்நிலை பகுதிகளும் அரசு பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 265 ஏக்கர் பரப்பளவு உள்ள வேளச்சேரி ஏரியில் 53 ஏக்கர் வீட்டு வசதி வாரியத்துக்கும், குடிசை மாற்று வாரிய கட்டுமானத்துக்கு 140 ஏக்கர் நிலமும், தனியார் ஆக்கிரமிப்பு 18 ஏக்கர் போக 55 ஏக்கர் மட்டுமே நீர்நிலையாக தற்போது உள்ளது.
கடந்த 1938ம் ஆண்டு வரைபடத்தின் படி, மழைக்காலங்களில் பெய்யும் மழை வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அங்கிருந்து ஒக்கியம் துரைப்பாக்கம் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கும் செல்கிறது. புதிதாக கிண்டி ரேஸ் கிளப்பை நீர்நிலையாக மாற்றுவதற்கு புவியியல் ரீதியாக நடைமுறையில் சாத்தியம் இல்லை. மழை காலங்களில் கிடைக்கும் மழை நீரை மட்டுமே வேளச்சேரியில் சேமிக்க முடியும், கால்வாய்கள் அமைத்து வேறு எங்கும் சேகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பசுமை தீர்ப்பாயம், மழைக்காலங்களில் கிடைக்கும் மழையில் வெறும் 22 சதவிகிதம் மட்டுமே நீர் சேகரிக்கப்படுகிறது. நீர் சேகரிப்புக்கு எந்த திட்டமும் இல்லை. இருக்கும் நீர் நிலைகளையும் ஆக்கிரமித்துவிட்டு புதிதாக நீர்நிலை உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வெள்ளத்தால் ஒரு புறமும், வறட்சியால் ஒரு புறமும் பாதிக்கப்படும். சென்னையில் புதிதாக பசுமை பூங்கா உருவாக்குவதை விட நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவு. நீர்நிலைகளில் இனி கட்டிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம். வேளச்சேரி ஏரி மற்றும் பள்ளிக்கரனையில் சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post கிண்டி ரேஸ் கிளப் பசுமைப்பூங்கா விவகாரம்; சென்னையில் நீர் நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவு: பசுமை தீர்ப்பாயம் கருத்து appeared first on Dinakaran.