நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
சென்ற இதழில் வலைத்தளங்களில் உரையாடும் மொழியின் இயல்பு எப்படியானதாய் இருக்கிறது. நம் சமூகம் எப்படி அதை அநாகரிகமாகவும் குரூரமாகவும் கையாள்கிறது என்பதுபற்றி பார்த்தோம். இந்த இதழிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களை நாம் பேசுவோம். கவனஈர்ப்புக் கோளாறு (Attention Seeking Disorder ) என்பது இன்று பரவலாகப் பேசப்படுகின்ற உளவியல் கருத்தாக்கம்.
அதன்படி, பெண்கள் சிலர் தம் உடலைக் கவர்ச்சியாகக் காட்டி கவனஈர்ப்பு செய்ய விழைவதுபோல ஆண்கள், எதிர்மறையான / ஆபாசமான சொற்களை பேசுவதில் மனக்கிளர்ச்சி அடைந்து திருப்தி அடைக்கிறார்கள் என்று உளவியல் கூறுகிறது. பேசும்பொழுது ஏற்படும் சிக்கல்கள் போலவே எழுதும் பொழுதும் நிறைய குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், தான் நல்லவனாகவோ, பிரபலமாகவோ சமூகம் ஏற்றுக்கொண்ட வெற்றியாளனாகவோ ஆக முடியாதவர்களின் மனது அலைபாய்கிறது.
அது வலைதளங்களில் அடுத்தவரைக் கெட்டவராக கட்டமைக்க முனைகிறது. இது ஒன்றும் வியப்பிற்குரியது அல்ல என்றோ சித்தரிப்பை உருவாக்க முயல்கிறது.” என்ன கெட்டப் போட்டாலும் மண்டையில் இருக்கும் கொண்டை காட்டிக் கொடுத்து விடுகிறது” என்ற நகைச்சுவைக் காட்சி போலவே, தங்களது சுயரூபம் மற்றவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதை உணரும் அடிப்படைச் சிந்தனைகூட பலருக்கும் இல்லை என்பது வேதனையே.
இன்னும் தொடர்பு மொழிச் சிக்கல்களை ஆழமாகப் பார்த்தோமானால் Physical distance எனப்படும் உடல் ரீதியாக தொலைவில் எங்கோ இருக்கிறோம் என்ற அலட்சியம் பலரையும் தவறானவற்றைப் பகிரவைக்கிறது இப்போ என்ன வீடு தேடி வந்து அடிக்கவா போகிறார்கள்.என்ற அசட்டுத் துணிச்சலே தொடர்ந்து தவறுகளைச் செய்யத் தூண்டுதலாக இருக்கிறது. ‘‘மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற ஐயனின் மொழி ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
தன்னுடைய அனுபவங்கள், தற்காலிகமான அப்போதைய மனநிலை சார்ந்து அவசரமாகப் பதிவிடும் எதுவும் தவறாகப் போக வாய்ப்பு அதிகம்.Pre – Judgemental, எனும் முன்முடிவுகளால் ஏற்படும் பிரச்னைகளை ஏற்கனவே நாம் பலமுறை பேசி வருகிறோம். ஒரு பிரபலர் தன் படைப்பை (கவிதை /கட்டுரை ) சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார். நிறைய விருப்புக்குறியீடுகளும், பகிர்வுகளும், நல்ல பின்னூட்டங்களும் கிடைக்கின்றன. அதே படைப்பை ஒரு சாதாரணமான மனிதன் தன்னுடைய பக்கத்தில் இட்டால் அது Content ஆகாது.கவனம் பெறாது. 10 லைக்குகள் கூடத் தாண்டாது எனும் உண்மையை நாம் அறிவோம். இதுவே இன்றைய உலகம் Branding worship (முத்திரைக் கொண்டாட்ட மனநிலை ) என்று சிலவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் முன் தீர்மானங்களோடு இருப்பதற்கு உதாரணம்.
இத்தகையப் பிரச்சனைகளை உருவாக்கக் கூடிய தொடர்பு மொழிச் சிக்கல்களை சரி செய்ய, முதலில் Active Listening எனும் கூர்மையாக மனதைச் செலுத்திப் பார்க்கும் கவனிப்பை பழக வேண்டும். நல்ல நூல்களின் வாசிப்பின் மூலம் மனத்தெளிவைக் கொண்டு வரவேண்டும். நல்ல மனிதர்களோடு பழகுவது, நேர்மறையான எண்ண அலைகளை உருவாக்குவதுதான் உலகை ஆக்கபூர்வமானதாக ஆக்கும். இதில் நம் பங்களிப்பு என்ன ? இந்த உலகத்தில் எதைக் கொடுத்து விட்டுச் செல்கிறோம்? என்று தம்மைத் தாமே ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டு, சரிசெய்து கொள்ள முன்வருவது அவசியம்.
அதிகமாக வெளிப்படுத்துவது, வெளிப்படுத்தாமல் தன்னுள்ளே அழுத்திக் கொள்வது என்ற இருமனநிலைகளில் இருந்து தொடர்பு மொழியைக் கையாளுவது பிரச்னைகளை நிச்சயம் பெரிதாக்கும். எதை எவ்வாறு எவ்வளவு ஏன் பகிர வேண்டும் என்ற சமன் செய்யும் (balancing mind ) மனப்போக்கே ஆரோக்கியமானதாக இருக்கும். எந்தத் தகவலை எந்த பதிவினை உள்வாங்கினாலும் நம்மிடம் மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.
1.Who – அவர் நமக்கு யார் ? 2. Why? – அவர் ஏன் இப்படிக் கூறுகிறார்? 3 What? அதாவது அந்த வார்த்தையைக் ஏற்றுக் கொண்டால் எனக்கு என்ன நடக்கும்? அது நல்லதா/ கெட்டதா? இந்தக் கேள்விகளுக்கு நாம் உள்ளே பதில் கூறிக்கொண்டு அதற்குப் பிறகு, எதிர்வினை ஆற்றினோம் என்றால் அந்த பதில் தெளிவானதாக பயன் உள்ளதாக அமையும்.பக்குவமுள்ள மனிதர் என்ற மதிப்புமிக்க அடையாளத்தையும் poetilangokrishnan@gmail.comஅது வழங்கும்.
தற்காலத்தில் Criticism எனும் குறைகளை மட்டுமே பிறரிடம் காணுகின்ற மனோநிலை அதிகரித்து வருகிறது. இது மனிதர்களையே அடியோடு வெறுக்கும் நிலைக்குத் தள்ளக் கூடும். மேலும் Less Tolerance level (குறைவான தாங்கும் சக்தி) என்பதும் இன்றைய பெரும்பாலான குழந்தைகளின், இளைஞர்களின் பெரும் சிக்கலாக வீட்டிலும் வெளியேயும் உருவெடுத்து வருகிறது. அது ‘ நான் மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் சொல்வேன். ஆனால் என்னை யாரும் எதுவும் திருப்பிச் சொல்லி விடக்கூடாது’ என்ற சுயதொழுகைக் குறைபாட்ட்ன் அறிகுறியே.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள், ‘ மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை’ என்கிறார். அதிவிரைவாக பல நூறு மைல்கள் கடந்தும் பயணிக்கக் கூடிய, வார்த்தைகளை அவை நம்மைப் போலவே இருக்கும் இன்னொரு மனிதனுக்கானது என்ற உணர்வோடு அணுக வேண்டும். தம்முடைய Creativity குறைபாட்டை மறைக்க, ஊரே பேசும் விஷயத்தை (Viral / Trending Content ) அப்படியே சிந்திக்காமல் பரப்புவது இன்றைய சமூக வலைதளப் பயனாளிகளின் வாடிக்கை.
அடுத்தவர் பதிவை அவர் பெயரைப் போடாமல் தன் பக்கத்தில் தம்முடையது போல் பதிவது போன்ற டிஜிட்டல் திருட்டுகளும் சற்றும் குற்றவுணர்வுகளின்றிச் செய்யப்படுகின்றன. இதைத் தாண்டி, மொழியறிவும் பலருக்கும் குறைவாக இருக்கிறது. இணையவழி நிகழ்ந்து கொண்டிருக்கும் செம்மொழியான தாய்மொழிச் சிதைவுகள் குறித்து தனியே இன்னும் சில கட்டுரைகளே எழுதலாம்.
‘ சிறு துளியே பெருவெள்ளம் ‘. நாம் பயன்படுத்தும் சிறு சிறு சொற்களை முதலில் சீராக்குவோம்.Vocublary எனும் பொருத்தமான சொல்ற்றலை மேம்படுத்திக் கொள்வோம். சின்ன விஷயம் என்று எண்ணாமல் சிறியவற்றிலும் கவனம் செலுத்துவோம். நமது ஒரு சிறு வலைமொழி, அது ஏற்படுத்தும் அதிர்வு, உணர்வுகளின் வீச்சை உணர முயல்வோம். இந்த உலகிற்கு வரும் போது மொழி தெரியாமல் தான் வருகிறோம். மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு நாம் அதனைத் தவறான வகையில் பயன்படுத்துவது என்பது தாய்மொழிக்கும், தாய்க்கும் செய்யும் துரோகம் போலத்தான். எனவே, நம் வலைமொழியை மட்டுமல்ல வாழ்க்கை வழியையும் நல்லுணர்வுகளோடு நல்விளைவுகளை உருவாக்குவதாக செம்மைப்படுத்திக் கொள்ள முன்வருவோம்.
The post வலைமொழிச் சிக்கல்கள்… இணையத்தில் உரையாடுவது எப்படி? appeared first on Dinakaran.